இந்தியா-சீனா இடையிலான பிரச்சினையில் தலையிட உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், இருநாடுகளுக்கிடையிலான இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்கு நடுவே அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில், சீன நாட்டு ராணுவ வீரர்கள் ஏராளமானோர் இந்தியாவுடனான லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டனர். அத்து மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பக்கத்து நாடான சீனாவுடன் சுமுகமான உறவை பராமரிக்க இந்தியா விரும்புகிறது. ஆனால், இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மதித்து சீனா நடந்து கொண்டால்தான் இது சாத்தியம்.
இந்தியாவும் சீனாவும் உலகின் பெரிய நாடுகளாக உள்ளன. இந்நிலையில், இவ்விரு நாடுகளுக்கிடையிலான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் உலக நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, இந்தியா-சீனா இடையிலான பிரச்சினையில் தலையிட உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், இருநாடுகளுக்கிடையிலான இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.