சிறு பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும், பக்தி இலக்கியத்தையும் கற்று தாருங்கள்: ஆர்.என்.ரவி

சிறு பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும், பக்தி இலக்கியங்களோடு கல்வியையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும் என்று ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராசர் கல்லூரியில் நடைபெறும் கருமுத்து தியாகராச செட்டியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் தின விழா மற்றும் கருமுத்து கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பரிசுகள் வழங்கினார். நிகழ்வில் அவர் பேசியதாவது:-

இந்த திராவிட மண்ணில் இருந்து தான் நம் பக்தி இலக்கியம் தொடங்கி நாடு முழுவதும் சென்றடைந்துள்ளது. திருமுறை நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவை கல்வி பயிலாதவர்களுக்கும் பக்தி இயக்கத்தை எடுத்துக்காட்டியது ஆவண காப்பகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக நாடு முழுவதும் திருவாசகம் போன்றவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அதன்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியில் அது அழிக்கப்பட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்பாக நம் நாடு உயர்கல்வி, பொருளாதாரத்தில் உலகின் முதன்மையாக இருந்தோம், இப்போது நம் தேசம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. திருவாசகம் போன்ற பக்தி இலக்கியங்கள் நம்மை மேம்படுத்தும். தமிழகத்தில் அரசின் பங்கு இல்லாமலே நல்ல மக்களால் பல்வேறு பல்கலைகழகங்கள் உருவாக்கப்பட்டு ஏழைகளுக்கு உயர்கல்வி கிடைத்தது. சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்கள் சமூகத்தையும், நாட்டையும் மேம்படுத்த நினைப்பார்கள்.

நான் சாப்பாடு இல்லாமல் ஸ்லோகங்களை பகவத்கீதையில் படித்துள்ளேன். நமக்கு ஆரம்பக் கல்விகளில் நிலையான பாடத்திட்டம் இல்லை. எனவே திருவாசகம் போன்றவற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். கல்வியோடு சேர்ந்து பக்தி இலக்கியங்களும் இருக்க வேண்டும். அது தான் வேர். ஆனால் அந்த வேர் அறுக்கப்பட்டுள்ளது ஆன்மீகமும் கல்வியோடு இருந்த நிலையில் தவறான விளக்கத்தை சொல்லிக்கொடுத்து அரசியல் சூழல் நம் அடிப்படை பாடத்திட்டத்தை மாற்றிவிட்டது. இதனால் நாம் சொந்த நாட்டிலேயே அந்நியர்கள் போல உள்ளோம். மீனாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் போன்றவற்றின் முக்கியத்துவத்தை நம் தலைமுறைக்கு சொல்லித்தரவில்லை.

சிறு பிள்ளைகளுக்கு நமது கலாச்சாரத்தையும், பக்தி இலக்கியங்களோடு கல்வியையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும். வரும் 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைய உள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளச்சியை பெற உள்ளோம். எழுத்தறிவின்மை இல்லாமல் உலகின் முதன்மை நாடாக இந்தியா இருக்கும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.