“நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்” என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும், வால்பாறையிலும் நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவுகள் என் நெஞ்சைப் பதற வைக்கின்றன. தங்களது அன்புக்குரியவர்களையும், வீடு வாசல், உடைமைகளையும் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கைப் பேரிடர்கள் வழக்கமான நிகழ்வாகிவிட்டன. இதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு நாம் அனைவருமே கூட்டாகச் செயலாற்ற வேண்டியது மிக அவசியம்.
ஆபத்துகள் நிறைந்த கடினமான சூழ்நிலையில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினருக்கும், அர்ப்பணிப்புடன் செயலாற்றும் மாநில அரசுகளின் ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும்படி மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.