தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியரை என்னய்யா பாடம் எடுக்கிறீங்க? என அமைச்சர் பொன்முடி பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சராக இருந்தால் யாரை வேண்டுமானாலும் ஒருமையில் எடுத்தெறிந்து பேசலாம் என ஏதாவது விதி உள்ளதா? மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரியாதா பொன்முடிக்கு? என தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக அரசியலமைப்பு நாள் விழாவில் பங்கேற்று அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய பேராசியர் ஒருவர் ‘Unitary State’ என்றால் என்ன? என்பது குறித்து பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் பொன்முடி, “அட நீ என்னய்யா பொலிடிகல் சயின்ஸ் புரஃபஸர்!! இது கூட தெரியாது இருக்கீங்க? வாத்தியாருக்கு பயிற்சி கொடுக்கணும்” என பேசினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியில் செயலுக்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
‘Unitary State’ என்றால் என்ன? ஒற்றை ஆட்சி! இது கூடவா படிக்கவில்லை? சொல்லிக்கொடுக்கவில்லையா? எங்கே உள்ளது ‘Unitary State’? என்று தெரியாதா? வாத்தியார்கள் யாரவது சொல்லுங்க! அட நீ என்னய்யா பொலிடிகல் சயின்ஸ் புரஃபஸர்!! இது கூட தெரியாது இருக்கீங்க? வாத்தியாருக்கு பயிற்சி கொடுக்கணும் என்று சொல்லிவிட்டு ‘Unitary State’ என்பது இங்கிலாந்து என்று கூட தெரியவில்லையே, என்று கூறி, நொந்து போய் என்னய்யா பாடம் எடுக்கிறீங்கனு தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்முடி பேசியுள்ள்ளார்.
ஐக்கிய பேரரசு (United Kingdom) தான் ‘Unitary State’ என்பதும், அந்த அரசின் கீழ் தான் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளது என்றும் தெரியாமலே ஆசிரியர்களையும், மாணவர்களையும் பொன்முடி கிண்டல் செய்தது காமெடியின் உச்சக்கட்டம். மேலும், அரசியல் அறிவியல் அல்லது விஞ்ஞானம் குறித்து வாத்தியார்களும், மாணவர்களும் என்னத்த படிச்சீங்க என்று கேட்கிற பொன்முடி, ஒரு அரசியல்வாதியாக அவர் படித்தது, போதித்தது என்பது என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா? ஊழலை படித்து, ஊழலிலேயே ஊறித் திளைத்து, ஊழலை கற்பித்து வரும் பொன்முடி போன்றவர்கள் மாணவர்களை பார்த்து கிண்டலடிப்பது கண்டிக்கத்தக்கது, அதோடு, பேராசிரியர்களை ‘வாயா போயா’ என்று ஒருமையில் அழைத்து கடும் கண்டனத்திற்குரியது. தான் ஏதோ சரியாக சொல்லி விட்டது போல் நினைத்துக் கொண்டு மற்றவர்களை மட்டம் தட்டி பேசுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பொது மக்களை, பெண்களை பார்த்து ஓசி, ஓசி பஸ்ல தான போறீங்கன்னு கிண்டல் பேசிய பொன்முடி கேலியும், கிண்டலும் செய்ததும் மறக்க முடியாத நிகழ்வு.
அமைச்சராக இருந்தால் யாரை வேண்டுமானாலும் ஒருமையில் எடுத்தெறிந்து பேசலாம் என ஏதாவது விதி உள்ளதா? மரியாதை கொடுத்து மரியாதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரியாதா பொன்முடிக்கு? அவை நாகரீகம் என்றால் என்னவென்று கற்றுக்கொண்டு பின்னர் மற்றவர்களை கிண்டல் செய்யட்டும் அமைச்சர் பொன்முடி. இப்படி மற்றவர்களை மட்டம் தட்டி, அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.