ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து நாள்: உஷார் நிலையில் ராணுவம்!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது ரத்து செய்யப்பட்ட நாள் ஆகஸ்ட் 5. 2019-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு 70 ஆண்டுகால ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாள் இன்று. இந்த நாளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு விடுதலை அடைந்த போது தனி நாடாக இருந்தது ஜம்மு காஷ்மீர். இந்த பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க படையெடுப்பு நடத்தியது. அப்போதைய ஜம்மு காஷ்மீர் மன்னர், இந்தியாவின் உதவியை கோரினார். இந்தியாவுடன் இணையவும் ஒப்புக் கொண்டார். பின்னர் பாகிஸ்தானை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்ட இந்திய நிலப் பகுதிகள்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர். ஜம்மு காஷ்மீர் நமது நாட்டுடன் இணைக்கப்பட்ட போது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மூலம் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் நில உரிமை உள்ளிட்டவை அந்த மக்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. அதேநேரத்தில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வகை பயங்கரவாத குழுக்களையும் பாகிஸ்தான் களமிறக்கி யுத்த பூமியாகவே நீடிக்க வைத்திருந்தது.

இந்த நிலையில்தான் 2019-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு அதிரடியாக ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த 370-வது ரத்தை செய்தது. இதே ஆகஸ்ட் 5-ந் தேதிதான் இந்த அதிரடியை மத்திய பாஜக அரசு மேற்கொண்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டது 2 தனி யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. சட்டசபையுடன் கூட்டிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் உருவாக்கப்பட்டன. அப்போது ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் தற்போதும் சட்டசபை உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகள் முழு வீச்சாக மேற்கொள்ளப்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் விரைவாக சட்டசபை தேர்தலை நடத்த ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்திருந்தது. இன்னொரு பக்கம் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் தலை தூக்கி இருக்கின்றன.

இந்த நிலையில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நாளான இன்று பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமர்நாத் யாத்திரையும் இன்று பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நாளை கொண்டாடுவதற்கான நிகழ்ச்சிகளை பாஜக ஒருங்கிணைத்துள்ளது. இந்த நாளை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இதனால் ஜம்மு காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் அதி உச்ச உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அம்மாநில முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியான பிடிபியின் தலைவருமான மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தன்வீர் சாதிக் ஆகியோர் தங்களை பாதுகாப்புப் படையினர் வீட்டுச் சிறைகளில் அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பல அரசியல் கட்சிகளின் அலுவலகங்களையும் பாதுகாப்புப் படையினர் இழுத்துப் பூட்டிவிட்டனராம். இதனால் ஜம்மு காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.