ராஜமவுலியுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை: நடிகர் விக்ரம்!

“ராஜமவுலி கூட்டணியில் புதிய படம் உருவாகும். அது தொடர்பான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் உள்ளது” என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் புரமோஷன் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் விக்ரம் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், “ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் நீங்கள் நடிப்பதாக கூறப்படுகிறதே?” என கேள்வி எழுப்பியதற்கு, “ராஜமவுலி என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக எங்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும். அது தொடர்பான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில் தான் உள்ளது. அது இந்தப் படமா என்பது தெரியாது” என்றார்.

இயக்குநர் ராஜமவுலி ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு மகேஷ்பாபுவை நாயகனாக வைத்து புதிய படம் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் அல்லது விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் விக்ரம் இவ்வாறு பதிலளித்துள்ளார். முன்னதாக, தனது புதிய படம் குறித்து பேசியிருந்த ராஜமவுலி, “படத்தின் நாயகன் மகேஷ்பாபு. மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சியான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். படத்தின் கதாநாயகன் விக்ரம் பேசியதாவது:-

நான் 8வது படிக்கும் போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதுவரை முதல் மூன்று ரேங்குகளில் இருந்த நான் அதன் பின்னர் கடைசி மூன்று ரேங்குகள் எடுத்தேன். கல்லூரி வந்த பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் எனக்கு மேலும் அதிகரித்தது. ஐஐடி-யில் பிளாக் காமெடி என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தேன். அதற்காக எனக்கு சிறந்த நடிகர் விருது கொடுத்தார்கள். ஆனால் அன்றைய தினமே விபத்தில் காலை முறித்துக் கொண்டேன். காலையே வெட்டி எடுக்க வேண்டும் எனக் கூறினார்கள். 23 ஆப்ரேஷன்ஸ் செய்தார்கள். அதன் பின்னர் ஊன்று கோல் வைத்து நடக்க ஆரம்பித்தேன்.

மருத்துவரிடம் எனது அம்மா கேட்டபோது என்னால் நடக்கவே முடியாது எனச் சொன்னார்கள். ஆனால் நான் எனது அம்மாவிடம் நான் கட்டாயம் நடப்பேன் எனக் கூறினேன். பத்து ஆண்டுகள் எனது வாழ்க்கை பின்னால் சென்றது. வீட்டிற்கு வருமானம் இல்லாததால், ஊன்றுகோலைக் கொண்டே வேலைக்குப் போவேன். அப்போது எனக்கு மாதம் ரூபாய் 750 சம்பளம். முதலில் ஒரு ஊன்றுகோலை தூக்கி வீசிவிட்டு, ஒரு ஊன்று கோலைப் பயன்படுத்தி நடந்தேன். அதன் பின்னர் இரண்டு ஊன்று கோலையும் தவிர்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தேன். எனது அம்மா வேலைக்குப் போகவேண்டாம் எனக் கூறுவார். நான் நடிக்கவேண்டும் எனக் கூறிக்கொண்டே இருப்பேன். சினிமா வாய்ப்புகள் வந்த பின்னர் படம் எதுவும் ஓடவில்லை. இதில் 10 ஆண்டுகள் போனது. இதனால் எனது நண்பர்களும் சினிமாவை விட்டுவிடச் சொன்னார்கள். அன்றைக்கு சினிமாவை கைவிட்டிருந்தால், இன்றைக்கு நான் உங்கள் முன் பேசிக்கொண்டு இருக்க மாட்டேன்.

ஒரு கனவை நோக்கி நமது சிந்தனை இருந்தால் நம்மால் நிச்சயம் அதை அடைய முடியும். நான் சில நேரங்களில் எனக்குள்ளே கேட்டுக்கொள்வேன், ஒருவேளை சினிமா வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் என்ன செய்திருப்பாய் என, ‘இப்போதும் முயற்சி செய்திருப்பேன்’. ஏனென்றால் நான் சினிமாவை அவ்வளவு நேசிக்கின்றேன். நான் அவ்வளவு நேசித்த சினிமா எனக்கு கொடுத்த அன்பளிப்புதான் நீங்கள் (ரசிகர்கள்). இந்த படம் குறித்து மற்ற மாநிலங்களில் மிகவும் ஆர்வமாக கேட்கின்றனர். அதை ஏற்படுத்தியவர் ரஞ்சித். இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தொடர்ந்து நாம் படங்கள் செய்யலாம். ரஞ்சித் உங்கள் பேச்சுக்கு ஒரு வலிமை இருக்கின்றது. அதனை எப்போது சரியாகவே கையாளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.