தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை!

தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் 22 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் கைது செய்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களை நாள்தோறும் இலங்கை கடற்படை நடுக்கடலில் சுற்றி வளைத்து கைது செய்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களுடைய பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவது வழக்கமாகிவிட்டது. அண்மையில் இலங்கை கடற்படை தாக்கியதில் தமிழக மீனவர்கள் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த 22 மீனவர்களும் இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இலங்கையால் கடந்த சில வாரங்களில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசுகிறார்.