தமிழக மீனவர்களை மனித உயிர்களாகவே மத்திய அரசு மதிப்பதில்லை: ஆர்.பி.உதயகுமார்!

“குஜராத், கேரளா மீனவர்கள் என்றால் மத்திய அரசு உடனே துடிதுடித்து போர்க்குரல் எழுப்புகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் என்றால் கேட்பதற்கு நாதியில்லை. தமிழக மீனவர்களை மனித உயிர்களாகவே மத்திய அரசு மதிப்பதில்லை,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி ராமேசுவரத்தைச் சார்ந்த விசைப்படகு மூழ்கி அதிலிருந்த மலைச்சாமி என்ற மீனவர் மூழ்கி உயிரிழந்தார். ராமச்சந்திரன் என்ற மீனவர் கடலில் மாயமானார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் இன்று (ஆக.6) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். மீனவப் பிரதிநிதிகள் சகாயம், எம்ரிட், முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் முத்தையா, மாணிக்கம், சதன் பிரபாகர், மலேசியா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

1974-ல் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததிலிருந்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள், சிறைப்பிடிப்புகள், கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மீனவர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கிறது. மீனவப் பிரதிநிதிகள் எல்லாம் இங்கே ராமேசுவரத்தில் இருக்கும் போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக மீனவப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்ததாக நாடகம் ஆடுகிறார். அண்ணாமலை மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த சில மணி நேரங்களிலேயே 22 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத், கேரளா மீனவர்கள் என்றால் மத்திய அரசு உடனே துடிதுடித்து போர்க்குரல் எழுப்புகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் என்றால் கேட்பதற்கு நாதியில்லை. தமிழக மீனவர்களை மனித உயிர்களாகவே மத்திய அரசு மதிப்பதில்லை. தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் சாதித்திருப்பதைக் காட்டிலும் சறுக்கியிருக்கிறது. மின் கட்டணம், சொத்துவரி உயர்ந்துள்ளது. போதைப் பொருள் நடமாட்டம் தமிழகத்தில் எப்போதும் இல்லாத வண்ணம் அதிகரித்துள்ளது. கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. விவசாய, மீனவ, தொழிலாளர், மாணவ, ஆசிரியர் பிரச்சினைகளை தீர்க்க முடியாத பொம்மை முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுக தொண்டர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.