வங்கதேசத்தில் பெண் பிரதமரை முஸ்லீம்கள் துரத்தியடித்து இருப்பதாகவும், அதேவேளையில், மோடி நடுங்கி கொண்டு இருப்பதாகவும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
ஜனதா கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் தனது கட்சியை இணைத்தார். பாஜகவில் இணைந்த சுப்பிரமணியன் சுவாமி தனக்கு கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் பாஜக மேலிடமோ சுப்பிரமணியன் சுவாமியை முக்கிய பொறுப்புகள் எதையும் தற்போது வரை கொடுக்கவில்லை. ராஜ்யசபா எம்பி பொறுப்பு வழங்கியதோடு சரி.. அதன்பிறகு வேறு எந்த பொறுப்பையும் அவருக்கு கொடுக்கவில்லை. இதனால் சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது பாஜகவுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் விதமாக பரபரப்பு கருத்துக்களை கூறி வருகிறார். மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி சுப்பிரமணியன் சுவாமியால் சீண்டப்படாத பாஜக தலைவர்களே இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இப்படி தொடர்ச்சியாக விமர்சித்து வரும் சுப்பிரமணியன் சுவாமி, தற்போது வங்கதேச விவகாரம் பற்றி எரியும் சமயத்தில் மோடியை காட்டமாக விமர்சித்து ஒரு பதிவை போட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவிற்கு சொந்தமாக லடாக்கில் உள்ள 4067 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை சீனா ஆக்கிரமித்த போது, மோடி கோழை போல இருந்தார். இந்தியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு முஸ்லீம் தலைவர்கள் கூறும் போது, மோடி நிலையில்லாமல் இருந்தார். தற்போது வங்கதேச பெண் பிரதமரை முஸ்லீம்கள் துரத்தியடிக்கும் போது மோடி நடுங்கிக் கொண்டு இருக்கிறார். நேபாளம் குறித்து கேட்காதீர்கள்.. மோடியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.