தொழில் வாய்ப்புகள் தமிழகத்தின் கதவைத் தட்டத் தயாராக இருக்கும் போது அவற்றை இரு கரம் கூப்பி வரவேற்காமல் முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்ல போகிறோம் என்பதில் எந்த பயனும் இல்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் எப்போது புரிந்து கொள்வார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, ஜவுளித் துறையில், நமது நாட்டுக்கு, குறிப்பாக நமது திருப்பூருக்கு, அதிக வாய்ப்புகள் கிடைக்கச் சாத்தியக்கூறுகள் உள்ளது. வங்கதேசம், ஜவுளித் துறையில், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. மாதம் சுமார் 3.5 முதல் 3.8 பில்லியன் டாலர் வரையிலான ஜவுளி ஏற்றுமதி, வங்கதேச நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், அங்கு தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக, இந்த ஜவுளி ஏற்றுமதி, இந்திய அளவில் ஜவுளித்துறையில் பெயர்பெற்ற நமது திருப்பூருக்குக் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இந்திய அளவில், மொத்த ஜவுளி ஏற்றுமதியில், திருப்பூர் 50% க்கும் அதிகமான பங்கை வகிக்கிறது. தற்போது, இந்தக் கூடுதல் ஏற்றுமதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், திருப்பூரின் ஜவுளி வர்த்தகம், மேலும் பல மடங்கு அதிகரிக்கும். வங்கதேசத்தின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், குறைந்தது 10% ஏற்றுமதிக்கான வாய்ப்பு திருப்பூருக்குக் கிடைக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம், மாதம் சுமார் 300 – 400 மில்லியன் டாலர் வர்த்தகம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம், ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதாரமும் வளர்ச்சியடைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தமிழக முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ, இது குறித்த விழிப்புணர்வு இருக்கிறதா என்பது சந்தேகமே. வங்கதேசத்தில் இருந்து வெளியேற வாய்ப்பு இருக்கும் நிறுவனங்களையும், ஏற்றுமதி வாய்ப்புகளையும், தமிழகத்துக்குக் கொண்டு வர ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்கிறார்களா? தமிழகத்திற்கு இந்த நிறுவனங்களை கொண்டுவர முன்னெடுப்புகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினாரா என்பவை குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
மிகப்பெரும் தொழில் வாய்ப்புகள் தமிழகத்தின் கதவைத் தட்டத் தயாராக இருக்கும்போது, அவற்றை இருகரம் கொண்டு வரவேற்கும் வகையில் செயல்படாமல், முதலீட்டை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்லப் போகிறோம் என்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் எப்போது புரிந்து கொள்வார்? உடனடியாக, தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், ஜவுளித் துறையில், தமிழகத்துக்குக் கிடைக்கவுள்ள இந்த மாபெரும் தொழில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள, தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், திருப்பூர் பகுதிகள் முழுவதையும், இந்தக் கூடுதல் ஜவுளி ஏற்றுமதி வாய்ப்புக்களை முழுமையாகப் பெற்று, அவற்றை நிறைவேற்றத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், ஜவுளித் துறை உற்பத்தியாளர்கள் கருத்துக்களையும் முழுமையாகக் கேட்டறிந்து, மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்துப் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.