அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான சூமோட்டோ மறுஆய்வு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்க உள்ளார்.

திமுக ஆட்சியில் இருந்த 2006 – 11 வரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை மீது லஞ்ச ஒழிப்புத் துறை 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

அதேபோல 2006 – 2011 சமயத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலெட்சுமி உள்ளிட்டோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்தும் இருவரையும் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் விடுவித்தது.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுத்த உத்தரவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், இரு வழக்குகளையும் தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி காட்டினார். வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தார்.

இறுதி விசாரணையில் தங்கம் தென்னரசு தரப்பில், “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு இருக்க வேண்டும். எனினும், ஆதாரங்களைப் புறக்கணித்து விட்டு வழக்கு தொடர்வதை எப்படி நியாயமான விசாரணையாகக் கருத முடியும்” என்பது உள்பட பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அமைச்சர் ராமச்சந்திரன் தரப்பு, முதலில் விசாரித்த அதிகாரி ஆவணங்களை கவனிக்கத் தவறிவிட்டார் என்றும், புதிய விசாரணை அதிகாரியிடம் வழங்கிய ஆவணங்கள் சரியாக இருந்த காரணத்தால் மேற்கொண்டு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும், விசாரணை அதிகாரியின் முடிவை நீதிமன்றம் ஏற்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் வாதிடப்பட்டது. இறுதி அறிக்கையின் அடிப்படையில் தான் நீதிமன்றம் விடுதலை செய்தது என்றும் எடுத்துவைத்தது.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த ஜூன் மாதம் இறுதி வாதங்கள் நிறைவுபெற்றன. இதனையடுத்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்நிலையில் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு மறுஆய்வு வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று வழங்கவுள்ளார். இதனால் என்ன தீர்ப்பு வரும் என்று அமைச்சர் தரப்பும், திமுக தரப்பும் டென்ஷனில் உள்ளது.