அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

அதிமுக நிரவாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரான அப்பாவுவுக்கு எதிரான பென்-டிரைவ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந் ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்று பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவரான அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்தனர். ஆனால், அதை ஏற்க திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார் என்று பேசியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக பேரவைத் தலைவரான அப்பாவுவுக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரான ஆர்.எம். பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன்படி இந்த அவதூறு வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிரான கூடுதல் ஆதாரங்கள் மற்றும் பென்-டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் வரும் செப்.9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.