கூடலூர் கோக்கால் அருகே நிலம் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில், மத்திய புவியியல் துறையினர் இன்று (புதன்கிழமை) ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் 20 நாட்கள் அங்கு ஆய்வு செய்ய உள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் கோக்கால் பகுதியில் கடந்த ஜூன் மாதம், 27, 28 தேதிகளில், பெய்த கன மழையின் போது, ‘ஒன்றரை சென்ட்’ என்று அழைக்கப்படும் குடியிருப்பு பகுதியில் வீடுகள் மற்றும் முதியோர் இல்ல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. அந்த விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம், மத்திய நிலத்தியல் ஆய்வுத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், மத்திய புவியியல் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) சென்னையிலிருந்து கூடலுார் வந்தனர். அவர்கள் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வுக்குழுவினர், “பூமி மற்றும் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்ட பகுதிகளில் இன்று தொடங்கும் ஆய்வுப்பணிகள் 20 நாட்கள் வரை நடைபெறும்” என்றனர்.