உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்க்கு நடிகை சமந்தா ஆதரவு அளித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்க பதக்க போட்டிக்கு தகுதி பெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனை படைத்தார் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகட். இதையடுத்து நாடே இவரது வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தபோது, அவர் தகுதி நீக்கம் செய்திருப்பதாக ஒலிம்பக் சங்கம் அறிவித்தது பேரிடியாக அமைந்தது. ஃப்ரீஸ்டைல் 50 கிலோ மல்யுத்தப் போட்டியில், அதிக எடையுடன் காணப்பட்டால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டது. 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதை குறைத்துவிட அவகாசம் கேட்டபோதும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தர மறுத்துவிட்டது. இதையடுடுத்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய ஒலிம்பிக் சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்க்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், அவரது தகுதி நீக்கத்துக்கு தங்களது எதிர்ப்பையும், கண்டனங்களையும் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
இதையடுத்து நடிகை சமந்தா, வினேஷ் போகட்க்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டா பதிவில் போகட் புகைப்படத்துடன், “சில நேரங்களில், மிகவும் நெகிழ்ச்சியான நபர்கள் கடினமான தடைகளை எதிர்கொள்கின்றனர். நீங்கள் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு உயர்ந்த சக்தி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சிரமங்களுக்கு மத்தியிலும் நிலைத்து நிற்கும் உங்களின் அசாத்திய திறமை உண்மையிலேயே போற்றத்தக்கது. உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் வினேஷ் போகட்!” என்று குறிப்பிட்டுள்ளார்.