அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு: அண்ணாமலை வரவேற்பு!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த தீர்ப்பினை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஆனந்த் வெங்கடேஷ், சொத்துகுவிப்பு வழக்குகளில் சிக்கிய இரு அமைச்சர்களை விடுவித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு செப்டம்பர் 11ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பினை வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை தியாகாராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தென்னிந்திய மீனவர் பேரவையில் இருந்து 100 நபர்கள், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போஹத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டுள்ள வினேஷ் போஹத்தின் எடை, 100 கிராம் அதிகமாக தாண்டி இருப்பதால் தகுதிநீக்கம், செய்யப்பட்டதால், பதக்க வாய்ப்பை இழந்தார் வினேஷ் போஹத். இது ஒரு துதிர்ஷ்டமானது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார். கடந்த வாரம் உச்சநீதிமன்றம் 534 பக்கமுள்ள ஒரு தீர்ப்பு. உச்ச நீதிமன்றம் அருந்ததியருக்கு எஸ்.சி சமுதாயத்திற்கான 3% உள் ஒதுக்கீடு அந்த முக்கியமான தீர்ப்பு தமிழகத்திற்கு பொருந்தும் இதை பாஜக சார்பில் வரவேற்கிறேன்.

உயர் நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் இரண்டு அமைச்சர்களுக்கு தீர்ப்பளித்ததை வரவேற்கிறேன். தாமதமாக இந்த தீர்ப்பு வந்திருந்தாலும் வேகமாக இறுதி தீர்ப்பு வர வேண்டும். அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு இந்த வழக்கில் உள்ளனர். உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு போனாலும் தவறு செய்தவர்கள் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மறுபடியும் இதே தீர்ப்பு வர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். தமிழ்நாட்டில் எந்த ஒரு சமுதாயம் பாதிப்பு இல்லாத வகையில் தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழகத்தில் காவல்துறையை பாராட்டுகிறேன். ஒரு தேசிய கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபரை கைது செய்துள்ளனர். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை நம்பிக்கை கொடுத்துள்ளது.

பங்களாதேஷ் தற்போது அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் இந்திய அரசு எடுக்கக்கூடிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் துணை இருக்கும் என்று சொல்லி இருக்கின்றனர் அதனை நாங்கள் வரவேற்கின்றோம். எங்களோட நடவடிக்கைகளை திமுகவிற்கு பயமாளித்துள்ளது. எல்லா மதத்தையும் சமமாக நடத்த வேண்டும். பழனியில் முருகன் மாநாடு நடத்த முடிவு செய்துள்ளனர். நல்லபடியாக நடத்த வேண்டும். இதே போல சென்றால் வருங்காலங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லிடுவார். அமைச்சர்களும் ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அதற்கான அடித்தளத்தை அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.