அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவின் போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு, “நான் குற்றவாளி அல்லஎந்த குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக எனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் இருந்து வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. அமலாக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகர், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் விசாரணை தொடங்காத நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் எப்படி விசாரணை தொடங்க முடியும்? என அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறினார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை குற்றச்சாட்டுப் பதிவை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கும், குற்றச்சாட்டுப் பதிவுக்கும் தொடர்பில்லை எனக் கூறினார். இதையடுத்து, செந்தில் பாலாஜியை ஏன் நேரில் ஆஜர்படுத்தவில்லை என புழல் சிறை நிர்வாகத்திடம் தொலைபேசி வாயிலாக நீதிபதி எஸ்.அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஆஜர்படுத்த இயலவில்லை என சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்றைக்கு செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தாவிட்டால் காணொளி காட்சி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என அறிவித்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவுக்காக ஆஜர்படுத்தப்பட்டார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, குளுகோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்ட ஊசி பொருத்திய கையுடன் ஆஜர்படுத்தப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்களை நீதிபதி அல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின் தமிழிலும் படித்து காட்டி, குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார். தவறு என்று தெரிந்தே பலரிடம் லஞ்சம் பெற்றுள்ளீர்கள், இதனை ஒப்புக் கொள்கிறீர்களா? என குற்றச்சாட்டு பதிவின் போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு, “நான் குற்றவாளி அல்ல, இது என் மீது புனையப்பட்ட பொய் வழக்கு. நான் நிரபராதி, என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி. அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு. நான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை. அமலாக்கத்துறை கைப்பற்றிய அவணங்கள் என்னுடையது அல்ல.” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிபதி அல்லியிடம் பதில் அளித்துள்ளார்.
மேலும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதியிடம் செந்தில் பாலாஜி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, சாட்சிகள் விசாரணைக்காக வழக்கை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி. மேலும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 54 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி.