ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக நிர்வாகி பால் கனகராஜ் விசாரணைக்கு ஆஜர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு பாஜக நிர்வாகிகளில் ஒருவரான பால் கனகராஜ் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகி உள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த (தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்) வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (32) கடந்த செவ்வாய் இரவு கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக ஈடுபட்ட பொன்னை பாலு உள்ளிட்ட கொலையாளிகளை அஸ்வத்தாமன் திரைமறைவில் இருந்து இயக்கியதை போலீஸார் கண்டறிந்தனர்.

கொலைக்கான திட்டத்தை வகுத்துக் கொடுத்தது அஸ்வத்தாமனின் தந்தையும், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பிரபல தாதா நாகேந்திரன் என்பதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர். இதுஒருபுறமிருக்க அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீஸார் எதிர் பார்க்கின்றனர்.

குறிப்பாக, திமுக மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு அரசியல் பிரமுர்கள் மீது போலீஸாரின் சந்தேக பார்வை விழுந்துள்ளது. அவர்கள் முக்கிய பொறுப்பில் உள்ளதால், அவர்களுக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர். இதுமட்டுமல்லாது, கொலையாளிகளை ஒருங்கிணைத்ததோடு அவர்களுக்கான சட்டவிரோத பணப்பரிவர்தனைகளை செய்தது பிரபல தாதாவான ரவுடி சம்போ செந்தில் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு, 3 கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாம். ஆனால், இதுவரை அவர் போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக உள்ளார். தற்போது அவர் மும்பையில் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீஸார் மும்பை விரைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, சம்போ செந்திலின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், தண்டுபத்து ஆகும். அங்கு சென்றும் போலீஸார் விசாரித்துள்ளனர். ஆனால், அவர் சொந்த ஊரை விட்டு வெளியேறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் மும்பையில் அவரது தொடர்பில் உள்ளோரின் விவரங்களை சேகரித்து அதை அடிப்படையாக வைத்தும் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு, சிவ சக்தி, ஹரிதரன் ஆகியோரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோர் மூன்றாவது முறையாக போலீஸ் காவலில் விசாரிக்கப்படுகின்றனர். கொலையாளிகளில் முக்கியமானவர்களாக கருதப்படும் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் ஆகியோர் கடந்த இரண்டு முறை விசாரணை நடந்த போது, சில தகவல்களை மாற்றி கூறியுள்ளனர். ஆனால் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விசாரித்த போது அவர்கள் வேறு விதமாக பதில் அளித்ததுடன், கொலைத் திட்டம் தொடர்பான வேறு சில புதிய தகவல்களையும் தெரிவித்துள்ளனர். எனவேதான் 3-வது முறையாக பொன்னை பாலு மற்றும் வழக்கறிஞர் அருள் ஆகியோர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சேலம் சிறையில் இருக்கும் சம்போ செந்திலின் கூட்டாளி ஈசாவை, கட்டிட ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் புது வண்ணாரப்பேட்டை போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாகவும் விசாரித்துள்ளனர். அப்போது, சம்போ செந்தில் நெட்வொர்க், ஈசா அவரை சந்திக்கும் இடம், சென்னையில் அவருக்கு யார் யாரெல்லாம் மாமூல் வசூலித்து கொடுப்பவர்கள்?, ஆம்ஸ்ட்ராங் கொலையில் எந்தெந்த ஊரைச் சேர்ந்த கூலிப்படை கும்பல்களுக்கு தொடர்பு உள்ளது? என பல கோணங்களில் விசாரணை நடத்தியுள்ளனர்.

சேலம் மத்திய சிறையில் இருக்கும் சம்போ செந்திலின் மற்றொரு கூட்டாளியாகக் கூறப்படும் எலி யுவராஜையும், கட்டிட ஒப்பந்ததாரரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, எலி யுவராஜுக்கு தெரிந்த தகவல்களை பெற்று அதன் அடிப்படையிலும் விசாரணையை தீவிரப்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க பாஜக நிர்வாகிகளில் ஒருவரான பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டுமென செம்பியம் காவல் நிலைய போலீஸார் நேற்று இரவு சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து பால் கனகராஜ் எழும்பூரில் உள்ள தனிப்படை போலீஸாரின் அலுவலகத்தில் இன்று காலை நேரில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.