வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது வெற்றி: திருமாவளவன்!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இது எதிர்க்கட்சிகளின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா என்பதை முடிவு செய்வதற்கான வாரியத்தின் அதிகாரங்கள் தொடர்பாக தற்போதைய சட்ட பிரிவு 40ஐ இந்த மசோதா தவிர்க்க முயற்சிக்கிறது. வாரியத்தின் அதிகாரத்தை திருத்த மசோதா மட்டுப்படுத்தியுள்ளது. வக்பு வாரிய சொத்துக்களுக்கு உரிமை கோரும்போது அதனை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாரியத்தில் உள்ள அனைத்து சொத்துக்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து அதன் விவரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் இடம்பெற்றுள்ளது.

இப்படி பல திருத்தங்கள் வக்பு வாரியத்திற்கு எதிராக, சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த மசோதாவை எதிர்த்து பேசிய திருமாவளவன், “அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடிய வகையில், மக்களிடையே நிலவும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்திய உணர்வுடன் வாழுகிற இஸ்லாமியர்களை அன்னியர்களைப் போல மாற்றுகிற முயற்சி வேதனை அளிக்கிறது. அவர்களுக்கான சுதந்திரத்தில் தலையிடுவது என்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிற அனைத்து சுதந்திரம் மற்றும் உரிமைகளை எல்லாம் தட்டிப் பறிக்கிற வகையில் வேண்டும் என்றே திட்டமிட்டு இதில் அரசு தலையிடுகிறது. வக்பு போர்டு நீண்ட நெடுங்காலமாக தனித்து இயங்கி வருவதை நாம் அறிவோம். ஒவ்வொரு மதத்துக்கும் என சுதந்திரம் இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிற அனைத்து சுதந்திரம் மற்றும் உரிமைகளை எல்லாம் தட்டிப் பறிக்கிற வகையில் வேண்டும் என்றே திட்டமிட்டு இதில் அரசு தலையிடுகிறது. வக்பு போர்டு நீண்ட நெடுங்காலமாக தனித்து இயங்கி வருவதை நாம் அறிவோம். ஒவ்வொரு மதத்துக்கும் என சுதந்திரம் இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து திருத்த சட்டம் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய திருமாவளவன், “இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களில், வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவும் ஒன்று. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்புக் குரலை எழுப்பியதன் விளைவாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி” என்று கூறியுள்ளார்.