காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய குடிமகன் அல்ல என மீண்டும் கூறியுள்ள பாஜக முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி, ராகுல் காந்தியை பாதுகாக்கும் நடவடிக்கையை மோடி தொடர்ந்தால், அவர் மீதும் அமித் ஷா மீதும் வழக்கு தொடருவேன் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ராகுல் காந்தி இந்தியக் குடிமகன் இல்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி. அவரது புகாரைத் தொடர்ந்து மத்திய அரசு, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், முன்பு தான் தாக்கல் செய்திருத்த புகார் கடிதத்தின் நகலுடன், பிரிட்டன் அரசிடம் ராகுல் காந்தி சமர்ப்பித்துள்ளதாக கூறி ஒரு வருமான வரி படிவத்தின் நகலையும் இணைத்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார் முன்னாள் எம்.பி சுப்பிரமணியன் சுவாமி. சுப்பிரமணியன் சுவாமி இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
2003ஆம் ஆண்டு பிரிட்டன் குடியுரிமையைப் பெற்ற ராகுல் காந்தி ஒரு வெளிநாட்டவர். அப்படி இருக்கையில், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராகுல் காந்தியை பாதுகாப்பது ஏன்? ராகுல் காந்தி லண்டனில் நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். ஆகவே, அவருடைய இந்திய குடியுரிமை தகுதியற்றது. ராகுல் காந்தியை பாதுகாத்து வரும் நடவடிக்கையை மோடி தொடர்ந்தால், அவர் மீதும் அமித் ஷா மீதும் வழக்கு தொடருவேன். ராகுல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சோனியா காந்தியால் மோடி பிளாக் மெயில் செய்யப்பட்டாரா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.