என் மீது ஆதாரமற்ற பழி சுமத்துவது, காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்று விஷால் கூறியுள்ளார்.
நடிகர் விஷால், 2017-19-ம் ஆண்டுகளில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த போது, சங்க நிதியை தவறான முறையில் பயன்படுத்தியதாகவும் விஷால் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள், சங்கத்தை ஆலோசித்து தங்கள் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதற்கு பதிலளித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தயாரிப்பாளர் சங்கத்தை கண்டித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
நான் தலைவராக இருந்தபோது சங்க சட்ட விதிகளின் அடிப்படையில், செயலாளராக இருந்த கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். அது தொடர்பாக விளக்கமளிக்க சந்தர்ப்பம் அளிக்காமல், ஆதாரமற்ற பழி சுமத்துவது, காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு. என் மீது பொய் குற்றச்சாட்டு கூறிய சங்க நிர்வாகிகள், இக்கடிதம் பெற்ற 24 மணி நேரத்துக்குள் பத்திரிகை செய்தியை திரும்ப பெற்று பதில் அளிக்க வேண்டும். இல்லை எனில் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.