அமைச்சர் அன்பரசனின் தரக்குறைவான பேச்சு கண்டனத்திற்குரியது: டி.டி.வி. தினகரன்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்த அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தரக்குறைவான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாடுபோற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்படக் கூடிய தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா குறித்த தி.மு.க. அமைச்சர் தா.மோ.அன்பரசனின் தரக்குறைவான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து மறைந்த திரு. நாஞ்சில் மனோகரன் எழுதிய “கருவின் குற்றம்” என்ற கவிதை குறித்தும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய “வனவாசம்” குறித்தும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் பேச ஆரம்பித்தால் தா.மோ.அன்பரசன் போன்ற தி.மு.க.வினர்களில் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் ஏற்படக்கூடும்.

எனவே, தமிழக மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்து மறைந்த தலைவர்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் தி.மு.க.வினரை பேச விட்டு ரசிக்கும் கீழ்த்தரமான செயல்களை அடியோடு நிறுத்துவதோடு, இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.