முல்லைப் பெரியாறு குறித்து கேரளா அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பி வருவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கலாமா?. முல்லைப் பெரியாறு பிரச்சினையில் முதலமைச்சர் ஸ்டாலின் வாய் திறக்காமல் மௌனமாக காத்திருப்பதில் மர்மம் என்ன? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் கூறியதாவது:-
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி தென்தமிழகத்தை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த அணை நீரை நம்பி இந்த நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இந்த முல்லைப் பெரியாறு வரப்பிரசாதமாக, வறட்சியை போக்கும் அட்சய பாத்திரமாக இருக்கிறது.
152 அடி நீர்மட்டம் உள்ள இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாக 1979 முதல் கேரளா அரசியல்வாதிகள் பிரச்சனை செய்து வருவது நமக்கு கவலைக்குரிய ஒரு விஷயமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எப்பொழுதெல்லாம் கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ அப்பொழுது எல்லாம் இந்த முல்லை பெரியார் அணை பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்து கேள்வி எழுப்பி சந்தேகம் எழுப்பி, கற்பனை கதைகளை கட்டவிழ்த்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை, வீடியோக்களை ஆதாரம் இல்லாமல் வெளியிடுவதை வழக்கமாக கேரளா அரசியல்வாதிகள் கேரளாவில் மக்களை தூண்டி விடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள். அணை கேரளாவில் இருந்தாலும், கட்டுப்பாடு முழுவதும் தமிழக நீர்வளத் துறையிடம்தான் உள்ளது,
கடந்த 2014 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஜெயலலிதாபெற்று தந்தார்கள். அதில் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் பேபி அணையை பழுதுபார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பை பெற்றுத் தந்தார்கள். இதனைத் தொடர்ந்து தென் மாவட்ட விவசாயிகள் ஜெயலலிதாவிற்கு மதுரையில் நன்றி தெரிவித்து மிகப் பெரிய மாநாட்டை நடத்தினார்கள். 2014 ஆண்டு அக்டோபர் மாதம் கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு குழுவினர் முன்னிலையில் 142 அடியாக நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதன்பின் ஒவ்வொரு மாதமும் மத்திய கண்காணிப்பு குழுவினரும், துணைக் கண்காணிப்பு குழுவினரும் ஆய்வு செய்து அணை பலமாக உள்ளது என்ற அறிக்கையை உச்சநீதிமன்றத்திலே சமர்ப்பித்த வண்ணம் உள்ளனர்.
அணை பலமாக இருக்கிறது என்று சொன்னதற்கு பிறகும் அணையின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை எழுப்பி புதிய அணை கட்டுவோம் என்று சொல்லி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, அணை கட்டுவது தான் இதற்கு ஒரே தீர்வு என்று கேரளா மக்களிடத்தில் ஒரு தவறான செய்தியை பரப்பி, அச்சத்தை பரப்பி, பதட்டத்தை உண்டாக்கி இரண்டு மாநில மக்களிடத்திலே இருக்கிற சகோதர உறவை கேள்விக்குறி ஆக்கியுள்ள சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருப்பதை மத்திய அரசு, மாநில அரசு இரண்டும் வேடிக்கை பார்ப்பது எதிர்காலத்திற்கு இந்த நட்புறவிலே இந்த சகோதர உறவிலே ஒரு இடைவெளி ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் அச்சத்தோடு பார்க்கிறோம்.
முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் ஜீவவாதார உரிமை. இதை மிகப்பெரிய சட்டப் போராட்டம், தொடர் போராட்டம் நடத்தி தான் இந்த உரிமையை நாம் மீட்டெடுத்து இருக்கிறோம். மக்களுடைய வாழ்வாதாரத்தில் அரசியல் கலந்து அரசியல் காழ்புணர்ச்சியோடு கருத்துக்களை ஆதாரமில்லாத கருத்துக்களை, கற்பனை கதைகளை, யூக செய்திகளை தொடர்ந்து ஆடியோவாக, வீடியோவாக வெளியிட்டுக் கொண்டே இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
சமீபத்திலே வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், நிலச்சரிவிலே மூழ்கி ஏராளமான உயிர்கள் பலியானது நெஞ்சை உருக்குதாக இருக்கிறது. இந்த இயற்கை பேரிடர் சம்பவத்தை முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையுடன் முடிச்சு போட்டு இடுக்கி எம்பி உள்ளிட்ட கேரளா அரசியல்வாதிகள் வலைதளங்களிலேயே முல்லைப் பெரியாறு பிரச்சனை குறித்து பொய் பிரச்சாரம் செய்து வருவது மிகவும் வருந்துத்தக்கது, கவலை அளிக்கிறது.
இது குறித்து தமிழக அரசு இதற்கு தக்க பதிலடி கொடுக்கின்ற வகையிலே தமிழக மக்களுக்கு ஒரு முல்லைப் பெரியாறு அணை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையிலே, இந்த பாதுகாப்பு குறித்து ஒரு உரிய விளக்கத்தை வெளியிட்டு இதுபோன்ற ஆதாரம் இல்லை கற்பனை செய்திகளை, வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், தடுப்பதற்கும் முதலமைச்சர் முன் வருவாரா என்று தென் தமிழ் நாட்டு மக்கள் கவலையோடு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் கண்ணீரை துடைத்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி ஜெயலலிதா பெற்று தந்த அந்த தீர்ப்பை நிலை நிறுத்துவதற்கு முதலமைச்சர் வாய் திறந்து பேசுவரா? மக்களுக்கு ஏமாற்றத்தை எப்போதும் போல் பரிசாக தராமல் வாய் திறந்து பேசுங்கள் ஸ்டாலின் என்று தமிழ்நாட்டு மக்கள் விவசாயிகள் கவலையோடு காத்திருக்கிறார்களே? அவர்களுடைய கவலை தீர்க்க வாய்திறந்து இந்த மக்களுக்கு விளக்கம் சொல்லுங்கள். முல்லை பெரியார் குறித்து வாய் திறக்காமல் மௌனம் சாதிப்பதில் மர்மம் என்ன? இவ்வாறு அவர் கூறினார்.