சர்வதேச யானைகள் தினத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ட்வீட்டில், யானைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச யானைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. யானைகள் வனத்தின் முக்கிய அங்கமாகும். வனத்தை பரப்புவதில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. யானைகள் விதைகளை பரப்பும் காரணியாக திகழ்ந்து வருகின்றன. ஆகவே பூமியின் மிகப்பெரிய பாலூட்டிகளான யானைகளைப் பாதுகாக்க இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. யானைகளின் பாதுகாப்பு மற்றும் வாழ்விடம் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில் இன்று சர்வதேச யானைகள் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூகவலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்த நாள் யானைகளைப் பாதுகாக்க ஒரு சமூகமாக இணைந்து எடுக்கும் நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் நாளாக உள்ளது. உலக யானைகள் தினத்தில், யானையைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடரும் என உறுதி செய்கிறேன்.
ஆசிய யானைகளில் 60% இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் யானைகள் கலாச்சாரம், வரலாற்றின் அடையாளமாகவும் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. யானைகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில், யானைகள் செழித்து வளரக்கூடிய வசதியான வாழ்விடத்தைப் பெறுவதை உறுதி செய்ய முடிந்த அனைத்தையும் செய்வோம் என்ற எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகிலேயே அதிக யானைகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. அதிலும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன. யானைகள் யாருக்கும் தீங்கு ஏற்படுத்தாத உயிரினம் ஆகும். இருப்பினும் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்தே யானைகளின் செயல்பாடுகளும், எதிர்வினைகளும் அமைந்து விடுகின்றன என்று சர்வதேச யானைகள் தின விழாவில் விளக்கப்பட்டது.
ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யானைகள் தினவிழா இன்று (ஆக.12) கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தலைமை வகிக்க, வனச்சரக அலுவலர் அருண்குமார், தலைமை ஆசிரியர் ரங்கராஜ் சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் வனத்துறையினர் பேசுகையில், “யானைகள் பொதுவாக ஆப்பிரிக்கா, ஆசிய இனத்தைச் சேர்ந்தவைகளாகவே உள்ளன. யானை யாருக்கும் தீங்கு ஏற்படுத்தாத உயிரினம் ஆகும்.
இருப்பினும் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதம், மனிதர்களால் முன்பு ஏற்பட்ட அனுபவம் ஆகியவற்றால் அவை எதிர்வினை ஆற்றுகின்றன. இதனால்தான் சில இடங்களில் யானைகள், மனிதர்களை துரத்துவதும், கொல்வதுமான சம்வபவங்கள் தொடர்கின்றன. அதேபோல் யானைகளின் வழித்தடம் மறிக்கப்படுவதாலேயே அவை திசை மாறி ஊருக்குள் வரும் நிலை ஏற்படுகிறது. யானை ஒரு நாளைக்கு 250 கிலோ வரை உணவு எடுத்துக் கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இதை அவற்றால் ஒரே இடத்தில் பெற முடியாது என்பதால் தினமும் யானைகள் 40 முதல் 50 கி.மீ. வரை பயணிக்கின்றன.
யானைகள் கூட்டமாகவே வாழும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் யானைக் கூட்டத்தை பெண் யானைதான் வழிநடத்தும். யானைகளால் காடும், இயற்கையும் வளம் பெறும். அதனால்தான் 2010-ம் ஆண்டு மத்திய அரசு யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து யானைகளின் பாதுகாப்புக்கு பல்வேறு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது” என்றனர்.
தொடர்ந்து, யானைகளைப் பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள் யானை போன்ற முகமூடி அணிந்து பங்கேற்றனர். பின்பு, யானைகள் குறித்து விநாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.