செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமக்கு ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையில், இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எப்போதுதான் விசாரணையை தொடங்கும்? என உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது. அத்துடன் செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி ஒகா, 3 மாதத்தில் விசாரணை முடிவடையும் என்ற அமலாக்கத்துறையின் வாதத்தை நிராகரித்தார். மேலும் ஜாமீன் தொடர்பான மனு மீதான விசாரணை என்பதால் அது குறித்து முதலில் முடிவெடிக்க விரும்புகிறோம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ஒகா தெரிவித்தார்.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். தற்போது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் போது ஏதே ஒரு காரணத்தை சுட்டிக்காட்டி வாய்தா வாங்குவதை அமலாக்கத்துறை வழக்கமாக வைத்திருந்தது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடந்த வாரம் விசாரித்தது. அப்போது அமலாக்கத்துறையின் வழக்கறிஞர் ஜோசப் ஹுசைன், 3-வது நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதில் ஆஜராக வேண்டும். அதனால் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒருநாள் ஒத்தி வைக்க வேண்டும் என்றார். இதில் அதிருப்தி அடைந்த நீதிபதி ஓகா, இன்னொரு நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்காக இந்த நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைப்பதா? இது சரியான கருத்து அல்ல என கண்டனம் தெரிவித்தார்.

இப்படி ஒவ்வொரு முறை விசாரணையின் போது அமலாக்கத்துறையானது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. இந்த நிலையில் இன்றும் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் உள்ளதால் அவரது ஜாமீன் மனு மீது முதலில் முடிவெடுக்க வேண்டியுள்ளது என நீதிபதி ஓகா தெரிவித்தார். ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர்கள் நியமனம் குறித்து வாதிடப்பட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஓகா, செந்தில் பாலாஜி மீதான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் எப்போதுதான் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கும் என கேள்வி எழுப்பினார். இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் 3 மாதங்களில் விசாரணை முடிவடையும் என தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த வாதத்தை உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா ஏற்க மறுத்து நிராகரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.