ஆணவக் கொலை தவறு இல்லை: ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக புகார்!

ஆணவக் கொலை தவறு இல்லை என்ற ரீதியில், பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால் வரும் கோவம் தான் அது, அது வன்முறை அல்ல என நடிகர் ரஞ்சித் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு புகார் அளித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பின் நடிகர் ரஞ்சித் இயக்கி, நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் நேற்று முன் தினம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சேலம் சென்ற நடிகர் ரஞ்சித் தனது ரசிகர்களுடன் கவுண்டம்பாளையம் படத்தை பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னை எதிர்ப்பவர்கள் தன் படத்தை பார்க்க வேண்டாம்.. கவுண்டம்பாளையம் படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக கூறி என்னை எதிர்ப்பவர்கள் படம் பார்த்து விட்டு பேச வேண்டும். படத்தை பார்க்காமலே பேசக்கூடாது. என்னை நேரடியாக எதிர்க்க முடியவில்லை என்பதால் முதுகில் குத்துவது போல் சிலர் செயல்படுகிறார்கள்” என்றார்.

அப்போது ஆணவ கொலை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,”பெற்றவர்களுக்கு தான் வலி தெரியும், பைக்கை திருடி சென்றாலே உடனே போய் அடிப்பதில்லையா? பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்ற அக்கறையினால் வரும் கோபம் தான் அது, அது வன்முறை அல்ல” என்றார்.

தமிழகத்தில் பல சாதி ஆணவ கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதற்கு ஆதரவாக ரஞ்சித் பேசி இருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதற்காக தனி சட்டம் வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை இருந்து நிலையில் ரஞ்சித்தின் இந்த பேச்சு பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஞ்சித்தின் பேச்சுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்து வருகிறது. மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களும், அமைப்புகளும் ரஞ்சித்துக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த நடிகர் ரஞ்சித், ”பெற்றோர்களுக்காகவும் குடும்பங்களுக்காகவும் தான் இந்த படத்தில் செய்தி சொல்ல வருகிறேன். என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. என்மீது சமூக வலைதளங்களில் திரித்து கூறப்படுகிறது. ஆணவ கொலைக்கு ஆதரவானவன் நான் அல்ல” என கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு புகார் அளித்துள்ளார். அதில், “நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில் திட்டமிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. தணிக்கை குழுவிடம் புகார் அளித்தபின் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் போக்கில் ரஞ்சித் பேசி வருகிறார். இப்படிப்பட்ட பேச்சுக்களை ஏற்க முடியாது. சாதி ஆணவக் கொலைக்கு ஆதரவாக ரஞ்சித் பேசியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருக்கும் நிலையில் இது போன்ற பேச்சுக்கள் ஆபத்தை விளைவிக்கும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.