தூய்மைப் பணியாளரின் மகளான துர்கா, நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில் அவரது பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன் என்றும், கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றியவர் சேகர். கடந்த சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இவரது மகள் துர்கா (30) குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றார். அவருக்கு நகராட்சி ஆணையர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. 2015ல் குடும்ப சூழல் காரணமாக திருமணம் செய்து 2 குழந்தைகளுக்குத் தாயான துர்கா, விடாமுயற்சியோடு போராடி சாதித்துக் காட்டியுள்ளார்.
கடந்த 2016ல் குரூப் 2 தேர்வு எழுதி தோல்வி அடைந்த துர்கா, தொடர்ந்து மனம் தளராமல் 2020ல் குரூப் 1 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால், தொடர்ந்து நடைபெற்ற முதன்மை தேர்வில் அவர் தோல்வியடைந்தார். மீண்டும் கடந்த 2022ல் குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதன்மை தேர்வில் வெற்றி பெற்றார். இந்த ஆண்டு நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 30க்கு 30 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றார் துர்கா. சிறுவயதிலிருந்து துர்கா நகராட்சி ஆணையராக வேண்டும் என்று விரும்பி நகராட்சி ஆணையர் பொறுப்பை தேர்ந்தெடுத்தார். அதன்படி கடந்த ஜூன் மூன்றாம் தேதி அவருக்கு நகராட்சி ஆணையராக பணி ஆணையும் வழங்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் கைகளால் நகராட்சி ஆணையராக பணி ஆணை பெற்ற துர்கா, “என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப் பணியாளர்கள் தான். அப்பா நல்ல சட்டை போட்டது இல்லை. நல்ல சாப்பாடு சாப்பிட்டது கிடையாது. தான் பட்ட கஷ்டத்தை நான் படக்கூடாது என எனக்காகவே உழைத்தார். இன்று நான் நகராட்சி ஆணையர் ஆகியுள்ளேன். இன்றிலிருந்து எங்க வாழ்க்கையே மாறப்போகிறது” என உருக்கமாகப் பேசி இருந்தார்.
இந்நிலையில், நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் துர்காவின் பேட்டியை பார்த்து நெகிழ்ந்து அவரை வாழ்த்தி இருப்பதோடு, கல்வியின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டி உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக இன்று எக்ஸ் தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன்! கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு! நான் மீண்டும் சொல்கிறேன்.. கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.