உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு வழக்குகளை தமிழகத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதற்காக பல்வேறு மாநிலங்களில் தமக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்குதான் மாற்ற வேண்டும் என தெரிவித்த உச்சநீதிமன்றம், மனுதாரர்கள் அனைவரும் நவம்பர் 18-ந் தேதிக்கு முன்னர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் பல மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளின் விசாரணையில் இருந்து உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது.

சென்னையில் கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழித்தது போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பாஜகவினர் பொய் பிரசாரம் செய்தனர். இது தொடர்பாக பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் கண்டனம் தெரிவித்தனர். லோக்சபா தேர்தல் பிரசாரத்திலும் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம ஒழிப்பு பேச்சு இடம் பெற்றிருந்தது.

இதனிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிராக கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுவை கடந்த மார்ச் மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், அரசியல் சாசனம் அளித்த கருத்து சுதந்திர உரிமையை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தற்போது உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்கிறீர்கள். நீங்கள் ஒரு மாநிலத்தின் அமைச்சர். பொறுப்பு உணர்ந்தும் பின்விளைவுகள் குறித்து யோசித்தும் பேச வேண்டும் என காட்டமாக கூறியிருந்தனர்.

இந்த வழக்குகளை இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையின் போது, அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாட்டின் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. பிற மாநில உயர்நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்ற முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் பிற மாநிலங்களில் நடைபெறும் வழக்குகளில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் அனைவரும் நவம்பர் 18-ந் தேதி முன்னதாக பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.