இந்திய ராணுவம் மற்றும் இந்திய ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக வக்ஃபு வாரியத்திற்கு அதிக சொத்துகள் இருக்கின்றனவா? அந்தத் தகவல் உண்மையானதா என்பது பற்றிய ஆதாரப்பூர்வமான விளக்கத்தை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி அளித்துள்ளார்.
வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்தது. இதனைச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். வக்பு வாரிய சட்டத்திருத்தத்தில் இந்த முறை 40க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பல ஷரத்துகளை ரத்து செய்ய புதிய மசோதா முன்மொழிந்துள்ளது. இஸ்லாமியப் பெண்கள், முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் உட்பட, பல மாற்றப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்திருத்தம் தொடர்பாக அசாதுதீன் ஓவைசி, “இந்த மசோதா அரசியலமைப்பின் 14, 15, 25 ஆகிய சட்டப் பிரிவுகளின் விதிகளை மீறுகிறது. இது பாரபட்சமானது. மத்திய அரசு தேசத்தைப் பிளவுபடுத்தும் வேலையைச் செய்துள்ளது. நீங்கள் முஸ்லிம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதாவே ஒரு சான்று” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தச் சட்டத் திருத்தம் குறித்து மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-
இந்த வக்பு சட்டத்திருத்தத்தை நாங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்வேன். எந்த ஒரு நிர்வாக அமைப்பையும் செம்மை செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக ஒரு வகுப்பினரை உசுப்புவதற்காக வக்பு வாரிய சட்டத்தைத் திருத்தும் போதுதான் இங்கே எதிர்ப்பு உருவாகிறது. இங்கே வக்பு வாரிய சொத்துகளை அபகரிப்பதற்கான முயற்சி மறைமுகமாக நடக்கிறது. நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இதை எதிர்க்கவில்லை. ஆராய்ந்து பார்த்த பிறகே உள்நோக்கம் உணர்ந்து எதிர்க்கிறோம். மாநில வக்பு வாரியம் மற்றும் மத்திய வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இரண்டு நபர்களை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்று சட்டத்தைத் திருத்துகிறார்கள். இது அபாயகரமான சட்டத்திருத்தமா? இல்லையா?
சீக்கியர்களின் பொற்கோயிலில் ஒரு இஸ்லாமியரையோ, கிறிஸ்துவரையோ அல்லது இந்துவையோ நிர்வாகத்தில் நியமிக்க முடியுமா? திருப்பதி தேவசம் போர்ட்டில், கேரள சபரிமலை கோயில் நிர்வாகத்திலோ ஒரு இஸ்லாமிய சகோதரரை நியமித்தால் ஏற்றுக் கொள்வார்களா? தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் இல்லாத ஒரு முஸ்லிமை நிர்வாகத்தில் சேர்க்க வேண்டும் எனச் சட்டத்தை மாற்றினார் ஏற்றுக் கொள்வார்களா? மதுரை, தென்காசி, பழனி எனப் பல கோயில்கள் உள்ளன. அதில் எல்லாம் இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு நாத்திகரை நிர்வாகத்தில் உறுப்பினராகச் சேர்ப்பார்களா? இவற்றில் எல்லாம் பிற மதத்தினரின் தலையீட்டை விரும்பாத மத்திய அரசு, ஏன் முஸ்லிம் மக்களால் நிர்வாகம் செய்யக் கூடிய ஒரு வக்பு வாரியத்தில் மட்டும் வேறு மதத்தினரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் எனச் சட்டத்தைத் திருத்துகிறது?
அடுத்து இன்னொரு மாற்றத்தைச் செய்துள்ளார்கள். முஸ்லிம் உறுப்பினர்கள்கூட தேசிய தன்னை கொண்டு உறுப்பினர்களாக இருக்க வேண்டுமாம்? இந்த தேசிய தன்னை என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? இந்தச் சொல்லே ஒரு பிரிவினை நோக்கம் கொண்டது இல்லையா? நான் ஒரு இந்தியன். கூட்டாட்சி தத்துவத்தின்படி மாநில உரிமைக்கு அதிகம் குரல் கொடுக்கக் கூடியவன். ஆக, நான் தேசிய சிந்தனைக்கு எதிரானவன் என சொல்ல முடியுமா?” என்றவர் பெண்களுக்கு முன்னுரிமை தருவதாக பாஜக அரசு முன்வைக்கும் வாதத்திற்கு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தமீமுன் அன்சாரி, “இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு பெண்தான் இருக்கிறார். அவர் ஒரு பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். அவரை புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவுக்கே அழைக்கவில்லை. அவர் விதவை என்பதால் ராமர் கோயில் திறப்புக்கு பாஜக அரசு அழைக்கவில்லை. இவர்கள்தான் இஸ்லாமியப் பெண்கள் உரிமையைப் பற்றிப் பேசுகிறார்கள். வக்பு வாரியத்தில் பெண்களை பணியமர்த்தக் கூடாது என்று யார் தடுத்தார்கள் சொல்லுங்கள்? எல்லா மாநிலங்களிலும் வக்பு வாரியத்தில் பெண்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பதர் சையத் வக்பு வாரியத்தின் தலைவராகவே இருந்தார். இந்தத் திமுக ஆட்சியில் இரண்டு பெண்கள் வக்பு வாரியத்தில் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். ஆகவே, யாரும் பெண்களைத் தடுக்கவில்லை. அத்துடன் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மத்திய அரசு வக்பு வாரியத்தில் கொண்டுவர நினைப்பதை நாங்கள் தடுக்கவும் இல்லை. ஆனால், இதுவரை பெண்களே நிர்வாகத்தில் இல்லை என்பதைப் போன்றும், சட்டம் அதை அனுமதிக்காததைப் போலவும் ஒரு பொய்யான தோற்றத்தை ஏன் பாஜக அரசு உருவாக்க நினைக்கிறது?
ராணுவத்திற்கும் ரயிலே துறைக்கும் அடுத்தபடியாக அதிக சொத்துகளைக் கொண்டுள்ள அமைப்பு வக்பு வாரியம்தான். இந்தியா முழுமைக்கு 8 லட்சத்து 72 ஆயிரத்து 292 சொத்துகள் வக்பு போர்டுக்கு சொந்தமாக உள்ளன. 9 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலம் வக்புக்கு சொந்தமாக உள்ளது. அதிக பட்சமாக 27% சொத்துகள் உபியில் உள்ளன. அடுத்து மேற்கு வங்கம். இந்தச் சொத்துகளில் 3இல் 1 பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளன. பெரிய நகரங்களில் உள்ள வக்பு சொத்துகள் கார்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதை மீட்க மத்திய அரசு இதுவரை என்ன செய்தது? இந்தியா முழுக்க வக்பு சொத்துகள் மூலம் வரும் வெறும் 200 கோடிதான். இன்றைய சந்தை நிலவரப்படி வாடகைகள் முறையாக வசூலிக்கப்பட்டால் பல கோடி வருவாய் உயரும். 100 ஆண்டுகள் முன்னால் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைதான் இப்போதும் கிடைக்கிறது. அதிலும் முறையாக வாடகை தொகையை ஆயிரக்கணக்கான கடை உரிமையாளர்கள் செலுத்துவதே இல்லை. இதைச் சரி செய்தால், குறைந்த பட்சமாக 1000 கோடி வருவாய் வரும். அதிகபட்சமாகக் கணக்கிட்டால் 8 முதல் 12 ஆயிரம் கோடி வருமானம் வரும் என்று கணித்துள்ளார்கள்.
அண்ணாசாலையில் உள்ள பிஎம்டபுள்யூ ஷோரூம் உள்ள இடம் வக்பு வாரியத்திற்குச் சொந்தமானது. அங்கு 4 அடுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. குறைந்தது 8 லட்ச ரூபாய் வாடகை வருவாய் வருகிறது. ஆனால். வக்புக்கு தரை வாடகை வெறும் 1000 ரூபாய் தான் கொடுக்கிறார்கள். இதை சரி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. அதை நாங்கள் ஏற்கிறோம். மத்திய அரசு 44 சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. அவற்றை எல்லாம் முழுமையாக நாங்கள் எதிர்க்கவில்லை. குறிப்பிட்ட 2 அல்லது 3 விசயங்கள் மிக அபாயகரமாக மாற்றப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் உரிமையை முழுமையாகப் பறிக்கும் நோக்கில் அவை உள்ளன. அவற்றை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். அது மக்களுக்குப் புரிகிறது. மத்திய அரசு புரிந்தும் புரியாததைப் போல நடிக்கின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.