“நான் பேசும் கருத்தில் பார்வையாளர்களுக்கு முரண் இருக்கலாம். ஆனால், தங்கலான் நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவம் கொடுக்கும்” என இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது:-
விக்ரமுடன் இணைந்து பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். பார்வதி, மாளவிகா உள்ளிட்ட அனைவரும் கடினமான உழைப்பை செலுத்தியுள்ளனர். ஒரு இயக்குநரிடம் இப்படியான நடிகர்கள் கிடைத்தால், அந்த இயக்குநர் தான் நினைத்த கதாபாத்திரத்துக்கு உயிரூட்ட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இவர்களை படத்தில் நடிகர்களாக தேர்ந்தெடுத்ததை பெருமையாக நினைக்கிறேன். எதற்காக எனக்கு இவர்கள் இத்தனை உழைப்பு கொட்டி நம்பினார்கள் என்று நான் யோசித்திருக்கிறேன். நான் கேட்டதை சரியாக புரிந்து கொண்டு வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு நன்றி.
ஜி.வி.பிரகாஷுடன் முதன்முறையாக பணியாற்றியது போன்ற உணர்வே எழவில்லை. அவர் இந்த ஸ்கிரிப்டை நம்பினார். என்னை நம்பினார். பாடல்கள் மக்களால் கொண்டாடப்படுகிறது. அட்டகாசமான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். முழு ஆதரவு கொடுத்த ஞானவேல் ராஜாவுக்கு நன்றி. இன்றைக்கு வரையிலுமே படத்தை வெளியிடுவதே சவால் நிறைந்ததாக உள்ளது. நிறைய பொறுப்புகளை வைத்துக்கொண்டு என்னை வந்து பார்த்தார். அத்தனை அழுத்தங்கள் இருக்கும் போதும் என்னை பார்த்து நான் டென்ஷனாக இருக்கிறேனா என்று அறிந்து கொண்டார். புரமோஷனை பொறுத்தவரை விக்ரம் முழு வீச்சில் செயல்பட்டார். தன்னால் முடிந்த அளவுக்கு பங்காற்றினார். ஆந்திராவில் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதற்கு காரணம் விக்ரம் தான்.
என்னை பொறுத்தவரை நான் ஒரு வரலாற்று பயணி. என்னுடைய படங்களின் வழியே வரலாற்றில் நான் என்னவாக இருந்திருக்கிறேன் என்பதை அறிந்து கொள்கிறேன். அந்த வகையில் தான் ‘தங்கலான்’ படத்தையும் உருவாக்கியிருக்கிறேன். வரலாற்று ரீதியாக தங்கலான் யார்? அவர் எப்படி விடுதலை அடைகிறார் என்பது தான் படம். அதனை என்னுடைய மொழியில் பேச முயன்றிருக்கிறேன்.
சினிமாவை இப்படி சொல்லலாம் என்று நான் முடிவெடுக்கும்போது, பார்வையாளர்களையும் கவனத்தில் கொள்கிறேன். தமிழ் ரசிகர்கள் வெகுஜன திரைப்படம், கலை ரீதியான திரைப்படம் என்றெல்லாம் பிரித்து பார்த்தது கிடையாது. அதனால் தான் நான் இங்கு இந்த இடத்தில் நிற்கிறேன். நான் பேசும் அரசியலை வைத்து என்னை ஓரங்கட்டியிருக்க முடியும். ஆனால் தமிழ் ரசிகர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஏற்றுக்கொண்டார்கள்.
நான் பேசும் கருத்தில் அவர்களுக்கு முரண் இருக்கலாம். ஆனால், என்னுடைய திரைமொழி அவர்களை எங்கேஜ் செய்ததால், பார்வையாளர்கள் அதனுடன் கனெக்ட் ஆனார்கள். அது அவர்களை என்டர்டெயின் செய்தது. தன்னை யார் என்று அடையாளம் கண்டு கொள்ள விரும்பும் ஒருவரின் வரலாற்று தேடலை இந்தப் படம் பேசும். தங்கலானின் அக உலகம் எதனுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. வரலாற்றை அறிந்து கொண்டபின் தங்கலான் எந்த மாதிரியான முடிவை எடுக்கிறான் என்பது தான் படம். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் புதிய அனுபவத்தை கொடுக்கும். மக்கள் விரும்பும் மொழியில் பேசியிருப்பதால் கண்டிப்பாக அவர்களுடன் கனெக்ட் ஆகும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் கடன் சிக்கல் விவகாரத்தில் நீதிமன்றம் சொன்ன தொகையை அவசரமாக செலுத்தப்பட்ட நிலையில் தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே திட்டமிட்டபடி படம் நாளை வெளியாகவுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல விஐபிக்கள் பணத்தை கொடுத்து வைத்துள்ளனர். இவர், இந்த பணத்தை பலருக்கு கடனாக கொடுத்துள்ளார். இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமும் அடைந்து விட்டார். இதையடுத்து அர்ஜூன்லால் சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார்.
அந்த வகையில், அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஸ்டூடியோ கிரின் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013ஆம் ஆண்டு ரூ. 10 கோடி 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திருப்பிக் கேட்டு சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.
இதையடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக் கோரி சொத்தாட்சியர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ. 10 கோடி 35 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு 2013ஆம் ஆண்டு முதல் 18 சதவீத வட்டி, வழக்கறிஞர் கட்டணத்துடன் சேர்த்து சுமார் ரூ. 26 கோடி 34 லட்சம் செலுத்த வேண்டும். இந்த தொகையை வழங்காத இவர்களை திவாலானவர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், தங்கலான் படத்தை வெளியிடும் முன், அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பின் படத்தை வெளியிடலாம் என ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கை வந்தது. அப்போது, ரூ. 1 கோடி ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் செலுத்திய நிலையில், தங்கலான் திரைப்படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.