கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை(ஆக.8) இரவுப் பணிக்கு வந்த பெண் பயிற்சி மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் இன்று(ஆக. 14) விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எனினும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவின் பேச்சுவார்த்தையையடுத்து தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான, மனிதாபிமானமற்ற செயலின் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவருவதன் மூலமாக மருத்துவ சமூகம் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மீதும் மாநில நிர்வாகம் மீதும் கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களிலே மருத்துவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் அனுப்பி படிக்க வைப்பார்கள் என்று இந்தச் சம்பவம் யோசிக்க வைக்கிறது.
நிர்பயா வழக்குக்குப் பிறகு இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள்கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் ஏன் தோல்வியடைந்தன? ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கத்துவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், இந்த சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை மேற்கொண்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த தாங்க முடியாத வலியினால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நான் நிற்கிறேன். அவர்களுக்கு எப்படியேனும் நீதி கிடைக்க வேண்டும். சமூகத்துக்கு சொல்லும்வகையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக, மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்த மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளிவந்துள்ளது.
அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மருத்துவரின் உடலில் உள்ள பல காயங்கள், ஒரு மிருகத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதலைக் குறிக்கிறது. பாதிக்கப்பட்டவரின் தலையின் பல பகுதிகள் அதிர்ச்சியடைந்த அறிகுறிகளைக் காட்டின. இரண்டு காதுகளும், உதடுகளும் காயமடைந்தது மட்டுமில்லாமல், கழுத்தில் கடித்த அடையாளங்களும் உள்ளன. அதுமட்டுமின்றி, அவரது உடலில் 150 மி.கி. உயிரணு இருப்பது தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவரின் உடலில் 150 மி.கி. உயிரணு கண்டுபிடிக்கப்பட்டது என்பது இந்தக் குற்றச் செயலில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதைக் குறிக்கிறது என்று மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.