கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் தமிழக பாஜக சார்பில் பங்கேற்க இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:-
முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக என்னை அழைத்திருந்தார். நமது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் நூறு ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
முதல்வரின் அன்பான அழைப்பை ஏற்று தமிழக பாஜக சார்பில் நானும், மத்திய இணை அமைச்சர் முருகனும் கலந்து கொள்கிறோம். மத்திய அரசு இந்த நாணயத்துக்கு அனுமதி கொடுத்திருப்பதை தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகவும், கருணாநிதிக்கு கிடைத்த பெருமையாகவும் நான் பார்க்கிறேன்.
எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள், சித்தாந்த ரீதியாக, கட்சி அடிப்படையில் இருக்கலாம். அது வேறு. ஆனால் மாநிலத்தின் முதல்வராக ஐந்து முறை இருந்தவர், தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல கட்டங்களில் உழைத்தவர். எனவே இந்த நிகழ்வில் தமிழக பாஜக பங்கேற்கும். எப்படி பெருந்தன்மையோடு ராஜ்நாத் சிங் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வருகிறாரோ, அதே பெருந்தன்மையை தமிழக அரசும் காட்டும் என்று நம்புகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.