உத்தரப் பிரதேச மாநில சட்ட மேலவைக்கு நடந்த தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நடந்த சட்ட மேலவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றது. அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் அது தோல்வியைத் தழுவி 3வது இடத்தைப் பிடித்துள்ளது பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமீபத்தில்தான் சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு. இந்த நிலையில் அங்கு 36 சட்ட மேலவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலிலும் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. 33 தொகுதிகளை அது வென்றுள்ளது. மற்ற 3 இடங்கள் பிற கட்சிகளுக்குப் போயுள்ளது. இதில் ஒரு இடம் வாரணாசி என்பது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் உள்ளூர் பிரபலமான பிரிஜேஷ் சிங் என்பவரின் மனைவி அன்னபூர்ணா சிங் போட்டியிட்டார். அவரே வெற்றியும் பெற்றார். மிகப் பெரிய வெற்றியை அவர் பெற்றார். பாஜக 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதேசமயம், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் பாஜக வெற்றி பெற்று விட்டது. 33 தொகுதிகளில் வென்றதால் பாஜகவினர் உற்சாகத்துடன் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.