ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!

சுதந்திர தினத்தையொட்டி இன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில், தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இன்று 78வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.. இதை தொடர்ந்து அன்று மாலை அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் சார்பில், இந்த தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்து, ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக, மமக, உள்ளிட்ட கட்சிகள் எடுத்த எடுப்பிலேயே அறிவித்துவிட்டன.. ஆனால், திமுக மட்டும் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்தது.. பின்னர் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுகவும் அறிவித்தது.. அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “அரசு சார்பாக பங்கேற்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை தெரிவிப்பார். திமுக கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்” என்று கூறியிருந்தார்.

முன்னதாக, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்கிறது.. தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இன்று நடக்கக்கூடிய தேநீர் விருந்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ள தங்கம் தென்னரசு, “ஆளுநர் பொறுப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் அவர் கொடுக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க முடிவு செய்திருக்கிறோம், கருத்தியல் மாறுபாடு உள்ளதால் கட்சி ரீதியாக இந்த விருந்தில் திமுக பங்கேற்கவில்லை” என தெரிவித்துள்ளார்.