திமுகவுக்கு என் பெயரை கேட்டாலே பயம். மடியில் கனம் இருப்பதால்தான் அவர்களுக்கு என் மீது பயம். அது அப்படியே இருக்கட்டும். இதுக்கு பிறகுதான் விளையாட்டே ஆரம்பிக்க போகிறது என நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்தார்.
தேசிய மகளிர் ஆணைய தலைவியாக குஷ்பு கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியைத் தழுவினார். அதன் பிறகுதான் அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த பதவியிலிருந்து நேற்று ராஜினாமா செய்த குஷ்பு சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் குஷ்பு கலந்து கொண்டார். இதுகுறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
நான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் ஒன்றுதான். ஒரு பொறுப்பில் இருக்கும் போது கட்சி சார்பாக இயங்க முடியாது. உங்களுக்கே தெரியும், கமலாலயத்திற்கு (சென்னை பாஜக தலைமையகம்) ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் நான் வந்திருக்கிறேன். போன வருஷம் பிப்ரவரி மாதம் எனக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கொடுத்தார்கள். மார்ச் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டேன். அதன் பிறகு நான் கமலாலயத்திற்கே வரவில்லை. கட்சி சார்பாக உழைக்க வேண்டும். பாஜக காரியகர்த்தாவாக பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் ஆசை இருந்தது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளாக அப்படி செயல்பட முடியவில்லை. ஒரு பொறுப்பு கொடுத்துவிட்டதால் கட்சி பணிகளில் ஈடுபட முடியவில்லை. எனக்கு இது போன்ற உயரிய பதவியை கொடுத்த பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா, பி.எல். சந்தோஷ்ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால் எனது மனசில் கவனம் முழுக்க அரசியல்தான் இருக்கிறது. அப்படியிருக்கும் போது நான் பாஜக காரியகர்த்தாவாக பணியாற்றினால்தான் எனக்கு முழு திருப்தி கிடைக்கும். பெரிய பொறுப்புக்காக இந்த பதவியை ராஜினாமா செய்ததாக சொல்கிறார்கள். எப்போதுமே பேரம் பேசிவிட்டு நான் வாழ்க்கையை நடத்துறது கிடையாது. பாஜகவுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்கு இருக்கிறது. எனக்கு பேச்சு திறமை இருக்கிறது. ஆனால் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கொடுத்துவிட்டதால் என்னால் தேசிய அளவிலும் தமிழகத்திலும் நடக்கும் டிவி விவாதங்களில் கூட பங்கேற்க முடியவில்லை. இப்போது ஃப்ரீயாகிவிட்டேன். இனி கட்சி சார்பாக எங்கெல்லாம் குரல் கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் குரல் கொடுப்பேன். இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன், கட்சி சார்பாக எங்கும் சென்றும் பணியாற்றுவேன்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்காக ஏதேனும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா என கேட்கிறீர்கள். அப்படியெல்லாம் ஒரு அழுத்தமும் காரணம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பாரத தேசம் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என நமக்கு தெரியும். பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் எத்தனையோ விஷயங்களை அவர் பேசியுள்ளார். 2047 ஆம் ஆண்டு நம் இந்தியா பெரிய ஜனநாயக நாடாக மட்டுமில்லாமல் ஆற்றல்மிக்கதாகவும் இருக்க வேண்டும். இதற்கான மாற்றங்கள் குறித்து பிரதமர் பேசியிருக்கிறார். எல்லாமே நாடு முன்னேற்றத்திற்காகத்தான். நான் மட்டும் பேரம் பேசி கட்சியில் பதவி வாங்கி, முன்னேறி என்ன செய்ய போகிறேன். நம் தலைமுறை குழந்தைகளுக்கான சிறந்த பாரதம் உருவாக வேண்டும்.
2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடவே பதவியை ராஜினாமா செய்ததாக கேட்கிறார்கள். இது போல் ஒவ்வொரு தேர்தலிலும் இந்த கேள்வி வருகிறது. அந்த ஆண்டு என்ன நடக்கும் என்பது எனக்கே தெரியாது. இன்று கமலாலயம் வந்ததில் மகிழ்ச்சி. எனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து 8 மாதத்திற்கு முன்பே பேச ஆரம்பித்துவிட்டேன். என்னை காத்திருக்குமாறு அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் சொன்னார்கள். இதையடுத்து நான் கடந்த மாதம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். நேற்றைய தினம்தான் எனது ராஜினாமா ஏற்கப்பட்டது.
என் பெயரை கேட்டாலே திமுகவுக்கு பயம்தான். கட்சி பணிகளில் இல்லாத போதே நான் நிறைய பேசியிருக்கேன். இப்போது கட்சி சார்பாக பேசினால் எப்படியெல்லாம் பேசுவேன் என அவர்களுக்கு தெரியும். அந்த பயம் இருக்கட்டும். மடியில் கனம் இருந்தால்தான் பயம் இருக்கும். அந்த பயத்தால்தான் திமுகவினர் பேசி வருகிறார்கள். பேசட்டும். இனிதான் விளையாட்டே ஆரம்பிக்க போகுது. இவ்வாறு குஷ்பு கூறினார்.