சுதந்திரத்திற்கு சம்பந்தமே இல்லாத சிலர் இன்று உரிமை கொண்டாடுகிறார்கள்: செல்வபெருந்தகை!

சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ். ஆனால் ஆர்எஸ்எஸ், சங்பரிவார், பிஜேபியினர் இன்று சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்று செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தேசிய கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். முன்னதாக சேவாதள காங்கிரஸ் தலைவர் குங்ஃபூ விஜயன் தலைமையில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. மூத்த காங்கிரஸ் தலைவர் பசுபதி தன்ராஜின் சமூக பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும் அண்ணா சாலை தர்கா பகுதியில் இருந்து செல்வபெருந்தகை தலைமையில் 100 மீட்டர் நீளமுள்ள தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த தலைமுறை சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எப்படிப்பட்ட தியாகங்களை செய்து இருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த நேரு மற்றும் காமராஜர் எல்லாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். ஆனால் இன்று சுதந்திரத்திற்கு சம்பந்தமே இல்லாத சிலர் இன்று உரிமை கொண்டாடுகிறார்கள். சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறார்கள். இதையெல்லாம் இந்த தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது குண்டூசி தயாரிக்க கூட வாய்ப்பு இல்லை. ஆனால் அதன் பிறகு உலகமே திரும்பி பார்க்கக் கூடிய வகையில் இந்தியா செயல்பட்டது. பசி பட்டினியால் இந்தியா அழிந்து போகும் என்று நினைத்தார்கள். நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோகன் சிங் போன்ற தலைவர்கள் எல்லாம் உலகமே திரும்பி பார்க்கக் கூடிய வகையில் அவர்கள் காலகட்டத்தில் மிகப்பெரிய சிறப்பு பணிகளை செய்து உலகத்தை திரும்பி பார்க்க வைத்தார்கள்.

போலி சித்தாந்தம் என்பது பாஜகவும் ஆர்எஸ்எஸ் வைத்திருக்க சித்தாந்தம். பாஜகவும் ஆர்எஸ்எஸ்க்கும் என்ன சித்தாந்தம் இருக்கிறது. சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ். ஆனால் இன்று சொந்தம் கொண்டாட துடிப்பது ஆர்எஸ்எஸ், சங்பரிவார், பிஜேபியினர். இந்த கொடியை பிடிக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு உரிமை உண்டு ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு கிடையாது. சுதந்திர விழாவை கொண்டாட வேண்டும். இவர்களுக்கும் சுதந்திரத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.