லடாக் மோதல் 2-வது ஆண்டு நினைவு தினம்: ராஜ்நாத் சிங் அஞ்சலி!

2-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, லடாக் மோதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ந்தேதி சீன ராணுவம் அத்துமீற முயன்றது. அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்த மோதல் நடந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி கல்வான் ஹீரோக்களுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் தளத்தில், “2020-ம் ஆண்டு ஜூன் 15-16 தேதிகளில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் கவுரவத்துக்காக வீரத்துடன் போராடி தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த கல்வானின் மாவீரர்களை நினைவு கூருவோம். அவர்களின் தைரியம், வீரம் மற்றும் உயர்ந்த தியாகம் என்றும் மறக்க முடியாதது. அந்த வீரநெஞ்சங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

ஜம்மு – காஷ்மீர் எல்லை நிலவரத்தை பார்வையிட, இரண்டு நாள் பயணமாக வந்த ராஜ்நாத் சிங், பாரமுல்லா மாவட்டத்தில், பாதுகாப்பு படையினரின் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது:-

பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாக, இந்த யூனியன் பிரதேசம் பல பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்துள்ளது. தாக்குதல்கள் வாயிலாக, இந்தியாவின் அமைதியை சீர்குலைத்து, ரத்த ஆறு ஓடச் செய்ய, பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்திய மக்களின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சித்தால், நம் ராணுவம் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும். பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பால், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளன. இதற்காக, பாதுகாப்பு படையினரை பாராட்டுகிறேன். நம் நாட்டை பாதுகாக்கும் கவசமாக, அவர்கள் விளங்குகின்றனர். அவர்களுடன் யார் மோத முற்பட்டாலும், ரத்தம் சிந்துவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.