மனசாட்சி இருந்தால் மருத்துவ மாணவி கொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு வலியுறுத்தி உள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு கூறியதாவது:-
கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் படுகொலை சம்பவத்தை பார்க்கும்போது தலைகுனிந்து கண்ணீர் விடுகிறேன். நம் நாட்டில் ஒரே பெண் முதல்வராக மம்தா பானர்ஜி தான் இருக்கிறார். ஆனால், அவர் முதல்வராக இருக்கும் மேற்குவங்க மாநிலத்தில்தான் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால், அவர் எந்த கவலையும் இல்லாமல் நிம்மதியாக தூங்குகிறார். இந்த சம்பவத்துக்கு தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தன்னை ஒரு பெண் என்று சொல்வதற்கும் முதல்வராக நீடிப்பதற்கும் தகுதி இல்லை. மனசாட்சி இருந்தால், மருத்துவ மாணவி கொலைக்கு பொறுப்பேற்று மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த சம்பவத்தை கண்டித்து அங்கு அமைதியாக போராடியவர்கள் மீது சில கும்பல் தாக்குதல் நடத்தி, கொலை நடந்த பகுதியில் உள்ள ஆதாரங்களை எல்லாம் அழித்து சென்றுள்ளது. இதை போலீஸார் தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். எனவே, இந்த சம்பவத்துக்கு போலீஸ் உறுதுணையாக இருப்பதாக சந்தேகம் எழுகிறது. அப்படியென்றால் இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜியும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஒவ்வொரு சம்பவத்துக்கும் குரல் கொடுக்கும் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள், இண்டியா கூட்டணி கட்சியினர் என யாரும் இந்த சம்பவத்துக்கு எந்த கண்டனமும் தெரிவிக்காமல், மவுனம் காக்கிறார்கள். அவர்களுக்கு கூட்டணிதான் முக்கியமா அல்லது இதைப்பற்றி பேச பயமா? இந்த மவுனம் மூலம் அவர்கள் இந்த சம்பவத்தை ஆதரிப்பதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.