மக்கள் பிரச்சினைகளில் பாஜகவினர் கவனம் செலுத்தி மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அதில் அரசியலைப் புகுத்தி கட்சியை பலப்படுத்த நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தில் சட்டவிரோதமாக பல்வேறு செயல்பாடுகள் நடைபெறுவதாக தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்வதற்காக சென்றனர். அப்போது பாஜகவினர், இந்து முன்னணியினர் உள்ளிட்டோர் பெரும் திரளாக கூடி ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது 75 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சட்டசபையில் விளக்கமும் அளித்தார். அப்போது குறுக்கிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பாஜகவினர் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்துங்கள். சாமானிய மக்களைப் பாதிக்கும் பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துட்டே போகுது. அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றிய அரசுக்கு அவர்கள் வலியுறுத்தனும். நமது மாநிலத்திற்கு வர வேண்டிய நிதி குறித்து நான் டெல்லி சென்றபோது சம்பந்தப்பட்டவர்களிடம் விரிவாக விளக்கமாக கூறியுள்ளேன், பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளேன். அதற்கு ஆதரவாக இருந்து பெறும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட வேண்டும்.
மாநிலத்திற்கு எது சாதகமோ அதைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். அதை விடுத்து தேவையில்லாமல், மக்கள் பிரச்சினைகளில் அரசியலைப் புகுத்தி அதன் மூலம் கட்சியைப் பலப்படுத்த முடியும் என்று நினைத்தால் அது நடக்கவே நடக்காது என்று திட்டவட்டமாக அவர்களுக்குக் கூறிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.