ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

ராஜபாளையத்தில் இருந்து ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்கு உட்பட்ட அழகர் காடு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்லமணி மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்த போது, ராக்கச்சி அம்மன் கோயில் ஆர்ச் முன் உள்ள விவசாயத் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது தெரியவந்தது. இறந்தது 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என வனத்துறையினர் தெரிவித்தனர். தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாட்சியார்புரத்தை சேர்ந்த துரைப்பாண்டியன்(60) என்பவரை கைது செய்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்: “ராஜபாளையத்தைச் சேர்ந்த கோபால மூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததால், காவலாளி துரைப்பாண்டி என்பவர் தோட்டம் வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் இருந்து சட்ட விரோதமாக மின் வேலி அமைத்துள்ளார். இரவில் அவ்வழியே வந்த யானை மின் வெளியில் சிக்கி உயிரிழந்து உள்ளது. மழை பெய்ததன் காரணமாக நாளை(ஆகஸ்ட் 19) யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின் அடக்கம் செய்ய உள்ளோம்” என்றனர்.