தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு: அஸ்வினி வைஷ்ணவ்!

பா.ஜ.க. ஆட்சியில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.879 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 7 மடங்கு அதிகம் ஆகும். ரெயில்வே திட்டங்களுக்கு 2,749 ஹெக்டர் நிலம் தேவைப்படும் இடத்தில் 807 ஹெக்டர் மட்டுமே கிடைத்துள்ளது. நிலம் பெற்றுத்தருவதற்கு தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.