கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்றது. இதில், நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவினை தொடர்ந்த விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக – பாஜக இடையே ரகசிய உறவு இருப்பதாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா தொடர்பாக அதிமுக அரசியல் பேசுவது வேதனையாக உள்ளது. தமிழ்நாட்டில் எது செய்தாலும் அரசியலாகவே பார்க்கப்படுகிறது. நாங்களும், திமுகவும் எதிரும் புதிருமான சித்தாந்ததில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான கலைஞரின் நாணயம் வெளியிட்டதில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நாங்கள் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு எம்ஜிஆர் நாணயம் வெளியிட அதிமுக அரசு கோரிக்கை வைத்த போது மத்திய அரசு அனுமதி வழங்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து விழாவை நடத்தினார்கள். மத்திய அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்று பாகுபாடு பார்ப்பது இல்லை.
2017ம் ஆண்டு கலைஞர உடல் நலம் குன்றியிருந்தபோது அவரது உடல்நிலை குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். நாங்க எதிரும் புதிருமாக இருந்தாலும், ஒரு தலைவரை மதிப்பதை அரசியல் நாகரிகமாக கருதுகிறோம். கலைஞருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியும், அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விரும்பும் போது அதற்கு தமிழக பாஜக சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது கடமையாகும். எனவே இதில் அரசியல் இல்லை. ஆனால் அரசியல் லாபத்திற்காக மத்திய அரசையும் பாஜகவையும் எடப்பாடி பழனிசாமி குறைகூறுகிறார். கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடத்தியதைப்போல, ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்த அதிமுக விரும்பினால் அனுமதி தரப்படும். நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர். நாணயத்தை இவர்களே வெளியிட்டு கொண்டது ஒரு பெருமையா? குடியரசு தலைவர் வெளியிட்டு அதை பிரதமர் வாங்கி இருக்க வேண்டும்.. அது தான் அவருக்கு பெருமை.. தி.மு.க. அதை சரியாக பயன்படுத்தி கொண்டது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.