வேங்கைவயல் விவகாரத்தில் 1 மாத காலம் அவகாசம் கேட்ட சிபிசிஐடி!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடந்து 600 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2022 டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. அப்போதும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 3 பேருக்குக் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதன்படி, குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. எனினும், வழக்கில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து விசாரணை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூரைச் சேர்ந்த சிபிசிஐடி கல்பனா தத் என்பவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடந்து வருகிறது. வேங்கை வயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடியினர் மனு தாக்கல் செய்துள்ளனர். சம்பவம் நடந்து சுமார் 600 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. குடிநீர் நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை கூட கைது செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சிபிசிஐடி மீண்டும் அவகாசம் கோரி உள்ளது.