அரசு விழாவில் கலந்துகொண்டால் அது கூட்டணியா?: தமிழிசை சவுந்தரராஜன்!

அரசு விழாவில் கலந்துகொண்டால் அது கூட்டணியா என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு பாஜக அலுவலகம் திமுகவினரால் தாக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான வழக்கு 17 வருடங்களாக நடந்து வருகிறது. இவ்வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சாட்சியம் அளிக்க பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “அரசியலில் எந்த விதத்திலும் வன்முறை இருக்கக் கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறேன். நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளேன். வன்முறை அரசியலில் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது. எதிர் கருத்துக்கள் வரலாம். அதற்கு எதிர்வினை தாக்குதலாக இருக்கக் கூடாது. பாஜகவின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தாக்கினால் பாஜகவில் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று நினைத்து நடத்தியது தான் அந்த தாக்குதல்” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, “கலைஞர் நாணயம் வெளியீட்டு நிகழ்ச்சி வெளிப்படையாக நடந்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு இணைந்து நடத்தும் விழாவாக இருந்துள்ளது. மாநில அரசு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவில் கலந்துகொண்டார். அரசு விழா என்பது வேறு, அரசியல் விழா என்பது வேறு. பிரதமர் மோடி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கலைஞர் பற்றிய நல்ல கருத்துக்களை கூறியுள்ளார். இப்படி ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை வரவேண்டும் என நினைக்கிறேன். அரசு விழாவை சுற்றி சுற்றி அரசியலுக்குள் கொண்டு வருகிறார்கள். மோடியை கோ பேக் என்று சொல்ல முடியாது. அவ்வாறு கூறியவர்கள் வரவேற்க வேண்டிய நிலை வரும்” என்றும் கூறினார்.

மேலும், “எதிர்மறை அரசியல் இல்லாமல் நேர் மறை அரசியல் இருக்க வேண்டும். திமுக பாஜக கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் தான் சொல்ல முடியும். அரசு விழாவில் இரு கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்து கொண்டாலே கூட்டணி என்று சொல்லி விட முடியாது. கூட்டணி என்பது அரசியல் நிகழ்வுகளை பார்த்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பது. திமுகவுடன் கூட்டணி வேண்டாமா என்பது குறித்து நாங்கள் இப்பொழுது சொல்ல முடியாது. தனித்தன்மையுடன் பாஜக வளர்ந்து வருகிறது என்பதை மட்டும் நான் இப்போது சொல்கிறேன்” என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.