வைணவத்தை இழிவுப்படுத்துவதா?: பா ரஞ்சித்துக்கு எதிராக போலீசில் புகார்!

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‛தங்கலான்’ திரைப்படத்தில் புத்த மதத்தை உயர்த்தி காட்ட வேண்டும் என்பதற்காக வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த படக்காட்சிகளை நீக்க செய்வதோடு, இயக்குநர் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நடிகர் விக்ரமுடன், நடிகர் பசுபதி, நடிகைகள் பார்வதி மேனன், மாளவிகா மேனன் உள்பட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ஓடி வருகிறது. இந்நிலையில் தான் ‛தங்கலான்’ திரைப்படம் தொடர்பான சர்ச்சை கிளப்பி உள்ளது. இந்த திரைப்படத்தில் இயக்குநர் பா ரஞ்சித் வைணவ மதம் இழிவுப்படுத்தி புத்த மதத்தை உயர்த்தி காட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது திரைப்படத்தில் வைணவ மதம் தொடர்பான காட்சிகளில் அந்த மதத்தை இழிவுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள பொற்கொடி குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் அவர் பா ரஞ்சித் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளித்துள்ளார். அந்த புகாரில், ‛‛புத்த மதத்தை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காகவே வைணவ மதத்தை இழிவுபடுத்தும்படியாக ‛தங்கலான்’ திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த ந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். மேலும் இந்த காட்சிகளை இடம்பெற செய்த இயக்குநர் பா ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி படத்தில் வைணவ மதத்தை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சியை நீக்காவிட்டால் படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் எனவும் வழக்கறிஞர் பொற்க்கொடி தெரிவித்துள்ளார்.