151 மக்கள் பிரதிநிதிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதிலும் 16 பேர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமுள்ள 151 மக்கள் பிரதிநிதிகளில் 135 எம்.எல்.ஏக்களும் 16 எம்.பி.க்களும் அடக்கம்.
மேற்கு வங்கம் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை, கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை என்று நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவமனை கல்வி நிறுவனங்கள், பேருந்து, வீடு உள்ளிட்ட எந்த இடமும் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை என்பதையே ஒவ்வொரு சம்பவமும் உணர்த்திக் கொண்டிருக்கின்றன. ஒருபக்கம் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை என்றால், மறுபக்கம் உத்தரப்பிரேசத்தில் மருத்துவர் ஒருவர் 20 வயது செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்த துயரம் நடந்துள்ளது. பாலியல் குற்றங்களுக்கு எந்தத் துறையும் விலக்கில்லை.
இந்நிலையில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்த புள்ளி விவரங்கள் தூக்கி வாரிப் போடுகிறது. இந்தத் தகவல் வேறு எதில் இருந்தும் கிடைக்கவில்லை. தேர்தலின் போட்டியிடுவதற்காக சம்மந்தப்பட்ட அரசியல் புள்ளிகள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இருந்துதான் இந்தத் தகவல் கிடைத்திருக்கிறது. இதுதொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நாட்டில் உள்ள 4,693 மக்கள் பிரதிநிதிகளின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்துள்ளது. 775 எம்.பிக்கள் மற்றும் 4,033 எம்.எல்.ஏக்களின் பிரமாண பத்திரங்களை முழுவதுமாக ஆய்வு செய்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவற்றில் 151 மக்கள் பிரதிநிதிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதிலும் 16 பேர் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமுள்ள 151 மக்கள் பிரதிநிதிகளில் 135 எம்.எல்.ஏக்களும் 16 எம்.பி.க்களும் அடக்கம். இந்தப் பட்டியலில் பாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள்.
பாஜகவுக்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் உள்ளது. பாஜகவில் 54 மக்கள் பிரதிநிதிகளும், காங்கிரஸ் கட்சியில் 23 மக்கள் பிரதிநிதிகளும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் தெலுங்கு தேசம் கட்சி இருக்கிறது. அந்தக் கட்சியில் 17 மக்கள் பிரதிநிதிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அடுத்து ஆம் ஆத்மி கட்சியில் 13 மக்கள் பிரதிநிதிகளும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 10 மக்கள் பிரதிநிதிகளும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதில், பாஜக காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா 10 மக்கள் பிரதிநிதிகள் மீது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளன. ஆம் ஆத்மி தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ், பாரத் ஆதிவாசி கட்சி உள்ளிட் கட்சிகளில் தலா ஒரு பிரதிநிதி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது. மாநில அளவில் எடுத்துக் கொண்டால் மேற்கு வங்கத்தில் 25, ஆந்திராவில் 21, ஒடிசாவில் 17 பிரதிநிதிகள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.
பெண்களுக்கு எதிரான வழக்குகள் இருப்பதை நன்கறிந்து கொண்டே அரசியல் கட்சிகள் சீட் வழங்குகின்றன. அப்படி சீட் வழங்கும்போதே பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் வாய்ப்பளித்துவிடுகிறோம் என்று அந்த ஜனநாய சீரமைப்புக்கான சங்கம் குற்றம்சாட்டுகிறது. இவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் நடவடிக்கை எடுக்க விடாமல் துஷ்பிரயோகம் செய்கின்றனர்.
சிலர் மக்கள் பிரதிநிதியாகியும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தொடர்ந்து தொந்தரவு செய்கின்றனர். எனவே இது போன்ற குற்ற பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.