“எளிய மனிதர்கள் கதைகளை பேசும்போது, அவர்களுக்கு நெருக்கமான கோபத்தை பதிவு செய்கையில், அதை சமூகத்துக்கு எதிராக மாற்ற முனைவதால், ஒரு படைப்பாளியாக சுதந்திரமாக என்னால் செயல்பட முடியவில்லை” என்று இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறுகையில், “ஒட்டுமொத்தமாக என்னை புரிந்துகொள்வதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் ‘வாழை’. படத்தில் வரும் சிறுவன் கதாபாத்திரம் நான் தான். என் சிறுவயதில் நிகழ்ந்த 1 வருட காலத்தின் கதை தான் இந்த திரைப்படம். இந்தப் படத்தின் இறுதிக் காட்சி என்னுடைய வாழ்வின் முக்கியமான காட்சி. அதை இயக்கும் போது நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த வயதில் நான் என்ன பார்த்தேனோ அதனை தான் படத்தில் பதிவு செய்திருக்கிறேன். இதில் என்னுடைய அறிவை திணிக்கவில்லை. நான் யார் என்று நிரூபித்த பின்பு இந்தப் படத்தை இயக்க வேண்டும் என நினைத்தேன். சொல்லப்போனால் இதை தான் நான் முதல் படமாக எடுக்க நினைத்தேன்” என்றார்.
மேலும், “பரியேறும் பெருமாள் கொண்டாடப்பட்ட அளவுக்கு, திருப்பி அடிக்கும் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ போன்ற படங்கள் கொண்டாடப்படவில்லையே’’ என்ற பா.ரஞ்சித்தின் ஆதங்கம் குறித்து கேட்டதற்கு, “நிறைய வன்முறை படங்கள் வருகிறது. அதனை திரை அனுபவமாக பார்க்கிறார்கள். அதேசமயம், நிஜ வாழ்க்கையிலிருந்து வன்முறையை காட்டும்போது, அதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் கேட்கிறோம். என்னுடைய படங்களில் குறைந்தபட்ச வன்முறைக்காட்சிகள் தான் இருக்கும். மற்ற சினிமாக்களில் பயங்கரமான வன்முறைகள் காட்டப்படும்போது, அது கொண்டாடப்படுகிறது. ஆனால், நாங்கள் வெளிப்படுத்தும் எதிர்வினைகள் ‘மிகப்பெரிய வன்முறை’களாக விமர்சிக்கப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஏன் வன்முறை சாயம் பூசப்படுகிறது.
ஏராளமான வன்முறை களம் கொண்ட படங்கள் வெளியாகின்றன. ஆனால், எளிய மனிதர்கள் கதைகளை பேசும்போது, அவர்களுக்கு நெருக்கமான கோபத்தை பதிவு செய்கையில், அதை சமூகத்துக்கு எதிராக மாற்ற முனைவதால், ஒரு படைப்பாளியாக சுதந்திரமாக என்னால் செயல்பட முடியவில்லை. இதனால், அடுத்தடுத்த படங்களை எடுக்கும்போதும் பயத்துடனே எடுக்க வேண்டியுள்ளது” என்றார்.