காவிரியின் குறுக்கே ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடி வரை தண்ணீர் உள்ளது. இதனால் காவிரி டெல்டாவுக்கு 12,000 கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரியின் கடைமடை பகுதியைச் சென்று சேர்ந்துள்ளது. அதே சமயம் தண்ணீர் வீணாகச் சென்று கடலிலும் கலக்கிறது. இதனை தடுக்க காவிரி, கொள்ளிடத்தின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கைகள் விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-
காவிரியில் உபரி நீர் கடலில் கலப்பதை தடுத்து மேகதாதுவில் அணை கட்டி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு வழங்கப்போகிறோம் என்று தவறான உள்நோக்கத்தோடு கர்நாடகா பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. மேகதாது அணை கட்டுமானத்தை மேற்கொண்டால் காவிரி டெல்டா முழுமையும் அழிந்து போய்விடும். ஆகவே, ராசி மணல் அணை கட்டுவது ஒன்றுதான் தீர்வாக அமையும் என கடந்த 1997 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் தேவகவுடாவுக்கு கருணாநிதி வலியுறுத்திய கருத்தை தமிழ்நாடு அரசு உணர்ந்து ராசிமணல் அணை கட்ட முன்வர வேண்டும். அதற்கான ஒத்த கருத்தை அரசியல் கட்சிகளிடம் உருவாக்குவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டும்.
ராசிமணல் அணை மட்டும் தான் கட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக காவிரி ஆணையத் தலைவரின் கருத்தும் அமைந்துள்ளது. மத்திய அரசு மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்கும் சூழல் உள்ளதாக தெரிய வருகிறது. ஆகவே, தமிழ்நாடு அரசு ராசிமணல் அணை கட்டுமான பணியை தீவிரப்படுத்த வேண்டும். இதற்கான ஒத்த கருத்து உருவாக்குவதற்கு கர்நாடக விவசாயிகளோடு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
காவிரி டெல்டா பகுதிகளில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைப்பதற்கு விளை நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்கள் கையகப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். எந்த விதமான தொழிற்சாலைகளை அமைக்க போகிறோம் என்பதை முதற்கட்டமாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதன் அடிப்படையில் தான் சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த முன்வர வேண்டும். மாறாக பேரழிவு திட்டங்களுக்கு கார்பரேட்டுகளை களம் இறக்க நிலங்கள் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.