காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. அதில் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கத் தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவுக்கும் இடையே மேகதாது விவகாரத்தில் நீண்ட காலமாக மோதல் இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயல்கிறது. ஆனால், மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்கும் நீர் தடைப்படும் என்பதால் தமிழக அரசு இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தர மத்திய அரசிடம் இப்போது கர்நாடக அரசு விண்ணப்பித்துள்ளது.
கர்நாடக அரசு ஏற்கனவே சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசின் மதிப்பீட்டுக் குழுவிடம் கடந்த மே 20ம் தேதி கோரியிருந்தது. கூடுதல் தகவல்களை மத்திய அரசு கோரியிருந்த நிலையில், கடந்த ஜூலை 9ம் தேதி கர்நாடக நீர்வளத்துறைப் பதிலளித்து கடிதம் எழுதியிருந்தது. அது தொடர்பான தகவல்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது. விண்ணப்பத்தைப் பரிசீலிக்கத் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கர்நாடக அரசு தனது விண்ணப்பத்தில் கூறியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த விண்ணப்பம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவால் பரிசீலிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசின் இந்த செயல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.