60 ரெயில் பெட்டிகள் எரிப்பு; ரூ.200 கோடி இழப்பு!

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 220 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளுக்கு பணியில் சேர்த்துக் கொள்ளும் ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஓய்வூதியம் கிடைக்காது. சலுகைகள் ரத்தாகும் என்று ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் கருதுகிறார்கள். பீகார் மாநிலத்தில் ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மளமளவென மற்ற மாநிங்களுக்கும் பரவியது. போராட்டத்தால் வன்முறை ஏற்பட்டது. இளைஞர்கள் ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள்.

இன்று 4-வது நாளாக பல்வேறு மாநிலங்களிலும் வன்முறை நீடித்தது. அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் 12 ரெயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இன்று மேலும் சில ரெயில்கள் தாக்குதலுக்குள்ளானது. தீ வைக்கப்பட்ட 12 ரெயில்களில் சுமார் 60 ரெயில் பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகிவிட் டன. நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் அடைந்துவிட்டன. இதையடுத்து நாடு முழுவதும் சுமார் 220 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இளைஞர்கள் நடத்தி வரும் வன்முறை சம்பவங்களால் ரெயில்கள் மட்டுமின்றி இன்று காலை பீகார் உள்பட சில மாநிலங்களில் லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் போன்ற வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டன. இதன் காரணமாக ரூ.200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரெயில்கள் ரத்து காரணமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட டுவிட்டர் பதிவில், “அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவ படைகள் மற்றும் அசாம் ரைபிள்களில் ஆட்சேர்ப்புக்காக அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும், அக்னிவீரர்களின் முதல் பேட்சுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.