மகப்பேறுக்குப் பின் பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு புதிய சலுகையுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.பி. கனிமொழி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
பெண் காவலர்களின் கோரிக்கையை ஏற்று மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு பணி மூப்புக்கு விலக்கு அளித்து அவர்களின் பெற்றோர், கணவர் வசிக்கும் ஊர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகள் பணி மாறுதல் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, மகப்பேறுக்குப் பின் பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு புதிய சலுகையுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.பி. கனிமொழி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தல் கூறியுள்ளதாவது:-
காவல் துறையில் மகளிர் பங்காற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததன் பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகப்பேறு சமயங்களில் விடுப்பு இல்லாமல் பல இக்கட்டுகளுக்கு உள்ளான பெண் காவலர்களுக்கு, மகப்பேறு விடுப்பு ஓராண்டுக்கு உயர்த்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு விடிவெள்ளியாய் அமைந்துள்ளது. மேலும், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்கள், குழந்தையைப் பராமரிக்கும் வகையில் 3 ஆண்டுகளுக்குக் கணவர் அல்லது பெற்றோர் வசிக்கக் கூடிய மாவட்டங்களில் பணியைத் தொடரலாம் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று மாவட்ட மாதிரி பள்ளிக்குச் சென்ற கனிமொழி, 4 பேருந்துகளில் 200 மாணவ – மாணவியரை அழைத்துக் கொண்டு ஆதிச்சநல்லூர் சென்றார். அப்போது அவரும் மாணவியருடன் பேருந்தில் அமர்ந்து பேசியபடி பயணித்தார். தொடர்ந்து, ஆதிச்சநல்லூர் ‘பி’ சைட்டில் உள்ள மியூசியம், ‘சி’ சைட்டியில் மியூசியம் அமைய உள்ள இடத்தில் வைக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை மாணவ – மாணவியருடன் சேர்ந்து பார்வையிட்டார் கனிமொழி. அவர்களுக்கு ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம் குறித்து திருச்சி மண்டல மத்திய தொல்லியல் ஆய்வாளர் முத்துகுமார், சைட் மேற்பார்வையாளர் சங்கர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, நல்லாசிரியர் சிவகளை மாணிக்கம் ஆகியோர் விளக்கம் அளித்தனர். தங்களை ஆதிச்சநல்லூர் அழைத்து வந்த கனிமொழிக்கு மாணவ – மாணவியர் நன்றி தெரிவித்தனர்.
கனிமொழி எம்.பி. பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்லூரி மாணவ – மாணவியர் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை பார்க்க வேண்டியது மிக அவசியமாகும். இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்த சைட் மியூசியம் இது. எனவே, அரசு மாதிரி பள்ளி மாணவ – மாணவியரை தற்போது ஆதிச்சநல்லூர் அழைத்து வந்துள்ளோம். இதேபோல் மற்ற பகுதிகளில் இருந்தும் மாணவ – மாணவியர் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை காண வரவேண்டும். உலக தரம் வாய்ந்த அருங்காட்சியம் தொடங்கும் பணி சிறிது காலம் தாமதப்பட்டது. தற்போது இந்த பணியை தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலையில் மாநில தொல்லியல் துறையினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கில் மாநில தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து எடுத்த பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விரைவில் பொருநை அருங்காட்சியகம் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.